முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் சிறையில் உள்ள சரப்ஜித்சிங் விடுதலையாகலாம்

வெள்ளிக்கிழமை, 6 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஜன.6 - பாகிஸ்தானில் மரண தண்டனை பெற்று சிறையில் வாடும் இந்தியர் சரப்ஜித்சிங் விடுதலையாவதற்கு பிரகாசமான வாய்ப்புக்கள் உள்ளன என்றும் அனேகமாக வருகிற ஆகஸ்டு 14-ம் தேதி அவர் விடுதலையாகலாம் என்றும் அவரது வக்கீல் கூறியுள்ளார். பாகிஸ்தானில் கடந்த 1990-ம் ஆண்டு நான்கு வெடிகுண்டு சம்பவங்கள் நிகழ்ந்தன. இவற்றில் 14 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்திற்கு இந்தியாவைச் சேர்ந்த சரப்ஜித் சிங்தான் காரணம் என்று பாகிஸ்தான் போலீசார் சரப்ஜித் சிங்கை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கில் சரப்ஜித்சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 1990-ம் ஆண்டு முதல் சரப்ஜித்சிங் பாகிஸ்தான் சிறையில் வாடி வருகிறார். அவர் நிரபராதி என்றும் அவருக்கும் வெடிகுண்டு சம்பவங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் ஆள்மாறாட்டத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளார் என்றும் சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினர் கூறி வருகின்றனர்.

சரப்ஜித் சிங்கை விடுதலை செய்ய பாகிஸ்தான் அரசை இந்திய அரசு பலமுறை வற்புறுத்தி வந்துள்ளது. ஆனால் சரப்ஜித் சிங்கின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டே வந்துள்ளன. இந்த நிலையில் சரப்ஜித் சிங் புதிதாக ஒரு கருணை மனுவை பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்த முறை அவரது கருணை மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர் விடுதலையாகலாம் என்று சரப்ஜித்சிங்கின் வக்கீல் ஆவாயிஸ் ஷேக் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதமே சரப்ஜித் சிங் விடுதலை செய்யப்படுவதாக இருந்தது. அதாவது  இந்தியாவில் ராஜஸ்தான் சிறையில் உள்ள பாகிஸ்தான் கைதி கலீல் சிஸ்தி விடுதலைக்கு பரிமாற்றமாக சரப்ஜித் சிங் விடுதலை செய்யப்படுவதாக இருந்தது. ஆனால் கலீல் சிஸ்தியை இந்திய அரசு விடுதலை செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் இது நடக்கவில்லை.

இப்போது சரப்ஜித் சிங் புதிதாக ஒரு கருணை மனுவை ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரிக்கு அனுப்பியுள்ளார். 

இந்த கருணை மனு சிறப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.

எனவே ரப்ஜித் சிங் விடுதலையாவதற்கு பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக வக்கீல்  ஆவாயிஸ் ஷேக் கூறினார்.

பாகிஸ்தானின் சுதந்திர தினமான ஆகஸ்டு 14-ம் தேதி அவர் விடுதலை செய்யப்படலாம் என்றும் ஷேக் கூறினார்.

சரப்ஜித் சிங் விடுதலை செய்யப்பட்டால் இந்தியா - பாகிஸ்தான் அமைதிப்பேச்சில் ஒரு முக்கியமான திருப்பம் ஏற்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்