முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி: தயாநிதி மீதான விசாரணையை சி.பி.ஐ. தாமதப்படுத்துவது ஏன்?

வெள்ளிக்கிழமை, 6 ஜனவரி 2012      ஊழல்
Image Unavailable

புது டெல்லி, ஜன. - 7 - 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்குமாறு கேட்டு சி.பி.ஐ. க்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. எஸ்ஸார் டெலி ஹோல்டிங்ஸ், லூப் டெலிகாம் ஆகிய நிறுவனங்களிடம் மென்மையாக நடந்து கொள்வதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.  சி.பி.ஐ. இயக்குனர் மற்றும் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோரின் தலையீட்டின் காரணமாக எஸ்ஸார் டெலி ஹோல்டிங்ஸ், லூப் டெலிகாம் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படவில்லை என்று கூறி தன்னார்வு அமைப்பு மனு தாக்கல் செய்திருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் 9 ம் தேதி தயாநிதி மாறன் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. அதற்கு மறுநாள் அவரது இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அதன் பிறகு இரண்டு மாதங்களுக்கு மேலான பிறகும் இது தொடர்பாக எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மனுதாரர் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், சம்பந்தப்பட்ட இரு நிறுவனங்கள் மீதும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்வதற்கான ஆதாரங்கள் இருப்பதாக சி.பி.ஐ. புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்கள். ஆனாலும் அந்த இரு நிறுவனங்கள் மீது சி.பி.ஐ.  ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யவில்லை. இது முரண்பாடாக உள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று வாதிட்டார்.  மத்திய அரசில் செல்வாக்கு படைத்த சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், இரு நிறுவனங்களுக்கும் வெளிப்படையாகவே நற்சான்று அளித்திருக்கிறார். வழக்கில் தலையீடு இருப்பதற்கு இதுவே சான்றாகும் என்று பிரசாந்த் பூஷண் கூறினார். ஆ. ராசாவைப் போலவே முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் 2 ஜி வழக்கில் குற்றம் புரிந்திருக்கிறார். ஆனாலும் தயாநிதி மாறன் மீதான விசாரணையை சி.பி.ஐ. வேண்டும் என்றே காலதாமதப்படுத்தி வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக 10 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவுக்கு உத்தரவிட்டது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்