முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுநீரக மோசடியில் ஈடுபட்ட 2 பேர் உ.பி.யில் கைது

புதன்கிழமை, 11 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

லக்னோ, ஜன.11 - ஏழை நோயாளிகளிடம் பணத்தாசை காட்டி அவர்களின் சிறுநீரகங்களை எடுத்து அவற்றை அதிக விலைக்கு விற்று மோசடி செய்த கும்பலை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் ஏழை நோயாளிகளிடம் பணத்தாசை காட்டி அவர்களின் சிறுநீரகங்களை எடுத்து மற்ற மாநிலங்களில் அதிக விலைக்கு விற்கும் மோசடி குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மருத்துவமனைகளில் தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். கடந்த டிசம்பர் மாதம் சிறுநீரக மோசடியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் லக்னோவில் மேலும் பல இடங்களில் இதுபோன்ற சிறுநீரக மோசடிகள் நடைபெற்று வருவதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மெஹபூப் அலி, அசோக்பாண்டே ஆகிய இருவரையும் லக்னோ போலீசார் நேற்று கைது செய்தனர். லக்னோவில் உள்ள சஞ்சய்காந்தி மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்கும் பிரிவில் ஊழியராக வேலைபார்த்து வருபவர் மெஹபூப் அலி. இவர் இந்த மருத்துவமனைக்கு வரும் ஏழை நோயாளிகளிடம் பணத்தை காட்டியும், மதுவை கொடுத்தும் அவர்களின்  சிறுநீரகத்தை எடுப்பதற்கு ஆசை வார்த்தை கூறி அவர்களை தன் வழிக்கு இழுக்கும் திறமை கொண்டவராக இருந்தார். இவரது இந்த சிறுநீரக மோசடிக்கு உடந்தையாக இருந்தவர் அசோக்பாண்டே. இவர் மூலம் நோ அப்ஜெக்சன் சர்டிபிகேட் உள்ளிட்ட பல போலி ஆவணங்களை வாங்கி மெஹபூப் அலி இதுபோன்ற மோசடிகளை செய்துவந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் தாங்கள் சிறுநீரக மோசடி செய்ததை ஒப்புக்கொண்டனர். தாங்கள் இதுவரை 7 பேரின் சிறுநீரகங்களை ஏமாற்றி எடுத்து சண்டிகாரில் உள்ள சிலருக்கு அதிக விலைக்கு விற்றதாக ஒப்புக்கொண்டனர். இந்த மோசடி குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்