முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டச்சத்து குறைபாடு ஒரு தேசிய அவமானம்: பிரதமர்

புதன்கிழமை, 11 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜன.11 - நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு இன்னமும் இருந்து வருவது ஒரு தேசிய அவமானம் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.  டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஓரளவுக்கு அதிகரித்துவந்தாலும்கூட ஊட்டச்சத்து குறைபாடு என்பது ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது என்றார். மேலும் அவர் கூறுகையில், ஊட்டச்சத்து குறித்து எடுக்கப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் கிடைத்துள்ள முடிவுகள் ஒரு விதத்தில் வருத்தமும் அளிக்கிறது. இன்னொரு விதத்தில் ஊக்கமும் அளிக்கிறது. என்றாலும்கூட ஊட்டச்சத்து குறைபாடு நமது நாட்டில் இன்னமும் இருப்பது ஒரு தேசிய அவமானம் என்றும் அவர் கூறினார். 

நான் ஏற்கனவே சொன்னதுபோல நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஓரளவுக்கு உயர்ந்தே வருகிறது. என்றாலும்கூட ஊட்டச்சத்து குறைபாட்டின் அளவைப் பார்க்கும்போது அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் இல்லை. இந்த ஊட்டச்சத்து குறைபாட்டின் விகிதாச்சாரத்தை  துரிதமாக குறைப்பதில் நாம் வெற்றிகாண முடியவில்லை என்றும் அவர் கூறினார். ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றின் முடிவுகளை வெளியிட்டுள்ள நிறுவனங்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் தமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார். நாடு முழுவதும் 9 மாநிலங்களில் மொத்தம் 112 மாவட்டங்களில் 73 ஆயிரம் குடும்பங்களை இந்த நிறுவனங்கள் ஆய்வு செய்தன. இந்த ஆய்வில் 5 குழந்தைகளில் ஒரு குழந்தைக்குத்தான் சரியான முறையில் ஊட்டச்சத்து கிடைக்கிறது. அது நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கிறது. மற்றகுழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்கு சர்வதேச குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்றும் அவர் கூறினார். இந்த குறைபாட்டை போக்குவதற்கு வேறு வழிகளிலும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்