முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய காப்பீடு திட்டம்: முதலமைச்சர் துவக்கி வைக்கிறார்

புதன்கிழமை, 11 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜன.11 - தமிழகத்தில் 1 கோடியே 34 லட்சம் மக்கள் பயன் பெறும் வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று துவக்கி வைக்கிறார்.இந்த காப்பீட்டுத் திட்டத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் பயன் பெறுவார்கள். 1016 சிகிச்சை முறைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு ரூ.1 லட்சம் வீதம் 4 வருடங்களுக்கு ரூ.4 லட்சம் வரை வழங்க இந்த திட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலின் போது. அனைத்துத் தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திற்கு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா இன்று தலைமைச் செயலகத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது. முதலமைச்சர் ஜெயலலிதா இந்த திட்டத்தை துவக்கி வைக்கிறார்.

இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் வருமாறு:

* இந்த காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு வருடம் ரூ. 1 லட்சம் வீதம் 4 வருடங்களுக்கு ரூ.4 லட்சம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

* சில குறிப்பிட்ட சிகிச்சை முறைகளுக்கு வருடத்திற்கு ரூ.1லட்சத்து 50 ஆயிரம் வரை வழங்கப்படும்.

* இத்திட்டத்தினால் 1.34 கோடி குடும்பங்கள் பயன்பெறும்.

* பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1016 சிகிச்சை முறைகளுக்கும், 113 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 23 நோய் அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

* சிகிச்சை சம்பந்தப்பட்ட பரிசோதனைகளும் காப்பீட்டுக்காக வரையறுக்கப்பட்ட தொகையில் அடங்கும். அறுவை சிகிச்சை தேவைப்படாத பட்சத்திலும் செலவழிக்கப்பட்ட கட்டணத் தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

* நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய நாள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திருப்பி அனுப்பப்படும் நாளில் இருந்து 5 நாட்களுக்கு செய்யப்படும் பரிசோதனைகளுக்கான கட்டணம் மற்றும் இதர செலவீனங்களுக்கான தொகையும் இத்திட்டத்தில் வழங்கப்படும்.

* இத்திட்டம் பச்சிளங் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைத்து வயதினரும் பயன்பெறத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

* தமிழகம் முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளை அணுகி கட்டணமில்லாமல் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

* பயனாளிகளுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்படும் ஆகிய சிறப்பு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளனன.

இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்வதற்கும், மற்ற விவரங்களை அறிவதற்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்கென்று அமைக்கப்பட்ட மையத்தையோ அல்லது கட்டணமில்லாத 24 மணி நேர தொலைபேசி சேவை.

18004253993 என்ற எண்ணையோ தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களை ..  என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்