முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ அதிகாரிகள் ஆலோசனை: பாக். அரசுக்கு நெருக்கடி

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2012      உலகம்
Image Unavailable

 

ராவல்பிண்டி, ஜன.13 - பாகிஸ்தானில் அரசுக்கும் ராணுவத்திற்கும் இடையே மோதல் போக்கு முற்றியுள்ள நிலையில், அந்நாட்டின் ராணுவ தளபதிகள் கூடி ஆலோசனை நடத்தியுள்ளதால் அந்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மிக நீண்ட காலம் நடைபெறுவதில்லை. அந்நாட்டில் ராணுவத்தின் கையே எப்போதும் ஓங்கியிருக்கும். அதிபர் ஜியா உல் ஹக், முஷாரப் போன்றவர்கள் ராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த ஆண்டு அமெரிக்க அதிரடிப்படையினர் பாகிஸ்தான் அரசிற்கே தெரியாமல் பாகிஸ்தானில் நுழைந்து தீவிரவாதி ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொன்றனர். அன்றுமுதல் அரசுக்கும் ராணுவ தளபதிகளுக்கும் இடையே மோதல் போக்கு உருவெடுத்துவிட்டது. பாகிஸ்தான் வீரர்கள் ஆப்கானில் உள்ள அமெரிக்க படையினரின் ஏவுகணைத் தாக்குதலில் பலியானதை அடுத்து பாக். ராணுவ தளபதி பகிரங்கமாகவே அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தார். 

இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்திற்கும், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கும் பிரதமர் கிலானிக்கும் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.  ராணுவமும், ஐ.எஸ்.ஐ.யும் சட்ட விரோதமாக செயல்படுவதாக  பிரதமர் கிலானி கடுமையாக விமர்சித்தார். இதற்கு ஐ.எஸ்.ஐ.யும், ராணுவமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனால் பாகிஸ்தான் அரசு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் இந்த இரு அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் அரசுக்கே எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இதையடுத்து நேற்று அனைத்து ராணுவ தளபதிகளின் கூட்டத்தை ஐ.எஸ்.ஐ.யும், ராணுவமும் கூட்டியுள்ளன. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால் கூட்டத்தில் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்பது தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவிக்கவும் ராணுவ செய்தித் தொடர்பாளர் மறுத்துவிட்டார்.

முன்னதாக பாதுகாப்புத்துறை செயலாளரை பிரதமர் கிலானி சில நாட்களுக்கு முன்பு அதிரடியாக பதவியில் இருந்து நீக்கிவிட்டார். இதனால் கிலானிக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என ராணுவம் நேரடியாகவே கூறிவிட்டது.  இது ஒருபுறமிருக்க நீதித்துறையும் அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. பாகிஸ்தான் அரசுக்கு அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் கிலானி ஒன்றும் நேர்மையானவர் அல்ல என்றும் அது கடுமையாக சாடியுள்ளது.  

இந்நிலையில் ராணுவத்திற்கும் அதிபர் சர்தாரிக்கும் கூட சுமூக உறவு இல்லை என்பது துரதிருஷ்டவசமானது. பாகிஸ்தானின் வரலாற்றில் இதுவரை எந்தவொரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்