முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட அலுவலகங்கள் மாற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.22 - பொங்கல் தினத்தன்று இரவு சென்னை எழிலகத்தில் இயங்கி வந்த தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் தொழில் வணிக வரித்துறையின் தலைமை அலுவலகங்கள் திடீர் தீவிபத்தில் முற்றிலும் எரிந்து நாசமானதால், மக்கள் நலப்பணிகளை செய்து வரும் அந்த இரு அலுவலகங்களும் முறையே, சிந்தாதிரிப்பேட்டை மற்றும் ராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கவும், அந்த அலுவலகளுக்கு தேவையான தளவாட சாமான்களும் வாங்க ரூ.2.46 கோடி நிதிஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சமூகநலத்துறை இயக்குனரகம், மற்றும் தொழில் வணிகத்துறை இயக்குனரகம் ஆகிய அரசு அலுவலகங்கள் இயங்கி வந்த சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள தொன்மை வாய்ந்த கட்டடத்தில் அரசு விடுமுறை தினமான 15.01.2012 அன்று நள்ளிரவு 12.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் சமூக நலத்துறை இயக்குனரகம் மற்றும் தொழில் வணிகத்துறை இயக்குனரகம் ஆகிய அலுவலகங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின.  இவற்றிலிருந்த பல ஆவணங்கள், கோப்புகள்,  கணினிகள், மேஜை, நாற்காலி போன்ற அனைத்து தளவாடச் சாமான்களும் தீக்கிரையாகி உள்ளன. சமூக நலத்துறைக்கு இதன் மூலம் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் அளவிற்கும் மற்றும் தொழில் வணிகத்துறை அலுவலகத்திற்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் அளவிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அலுவலகங்களின் பணிகள் பொதுமக்கள் சம்பந்தப்பட்டவை என்பதால், இப் பணிகளில் எவ்விதமான தொய்வும் ஏற்படாதிருக்க, உடனடியாக மாற்று இடங்களை தேர்வு செய்து சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் இயங்கிட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பணித்துள்ளார்.  இதன் அடிப்படையில் சமூகநலத்துறை அலுவலகம், சிந்தாதிரிப்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத சென்னை மாநகராட்சி ஆரம்பப் பள்ளி கட்டடத்திலும், தொழில் வணிகத்துறை அலுவலகம், சென்னை ராஜா அண்ணாமலை புரத்திலுள்ள சவுத்கெனால் பேங்க் சாலையில் அமைந்துள்ள தொழில் கூட்டுறவு வங்கியின் தலைமையகத்திலும் உடனடியாக இயங்க ஆரம்பித்துள்ளன.

சமூகநலத்துறை இயக்குனரகம் மற்றும் தொழில் வணிகத்துறை அலுவலகம் ஆகியவை முழுவீச்சில் செயல்பட ஏதுவாக, சமூகநலத்துறை இயக்குனரகத்திற்கு தேவையான புதிய கணினிகள், மேசை, நாற்காலிகள், தளவாட சாமான்கள் மற்றும் எழுதுப் பொருட்கள் வாங்குவதற்காக முதற்கட்டமாக 96 லட்சம் ரூபாயும், இதேபோன்று, தொழில் வணிகத்துறை அலுவலகத்திற்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாயும்  ஆக மொத்தம் 2 கோடியே 46 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த தீ விபத்தில் அழிந்த பணியாளர்களின் பணிப்பதிவேடுகள் மற்றும் கோப்புகளை விரைந்து மீண்டும் உருவாக்கவும் ஆணையிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இந்த துரித நடவடிக்கையின் மூலம், பல்வேறு சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தி வரும் சமூக நலத்துறையும், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான உதவித் திட்டங்கள்,  சுய வேலை வாய்ப்பு திட்டங்கள் போன்ற பல்வேறு  மக்கள் நலப் பணிகளை ஆற்றிவரும் தொழில் வணிகத்துறை அலுவலகமும் விரைவில் முழு அளவில் செயல்படத் துவங்கும்.    மேலும், இத்தொன்மை வாய்ந்த கட்டடத்தின் உறுதித் தன்மையை கண்டறியவும் இதை போன்றே புதிதாக ஒரு கட்டடத்தை இந்த வளாகத்திலேயே கட்டுவது குறித்தும் அல்லது இதனை முன்பிருந்தது போன்ற பழைய நிலைக்கே மீளக் கொண்டு வந்து அதைப் போன்றே புதிதாக ஒரு கட்டடத்தைக் கட்ட இயலுமா என்பது குறித்தும் ஆய்வு செய்வதற்காக டாக்டர் ஏ.ஆர்.சாந்தகுமார்,  அண்ணா பல்கலைக்கழக முன்னாள் முதல்வர் (ஓய்வு) ஆர்.கோபாலகிருஷ்ணன், பொதுப்பணித் துறையின் முதன்மைத் தலைமைப் பொறியாளர் (கட்டடம்)  சி.பழனிவேலு, தலைமை நகர்ப்புற திட்ட அலுவலர் மற்றும் தொன்மைக் குழுமத்தின் தலைவர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகிய அலுவலர்கள் அடங்கிய குழு ஒன்றினை அமைத்து,  அக்குழு தனது அறிக்கையினை ஐந்து நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  

மேலும் இக்குழு, சென்னை பெருநகரில் உள்ள இதர தொன்மை வாய்ந்த அரசு கட்டடங்களை ஆய்வு செய்து, அவற்றின் பாதுகாப்புத்தன்மை   குறித்து  அறிக்கை ஒன்றினை அளிக்கும்படியும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

மேலும், இனி வருங்காலத்தில் அரசு கட்டடங்களில் தீ விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கும்பொருட்டு,  தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு அலுவலக கட்டடங்களில் உள்ள தீயணைப்பு கருவிகளை காலமுறைப்படி பரிசோதனை செய்து,  அவைகளை தீ விபத்துக்கள் ஏற்படும் சமயம் உபயோகிப்பதற்கு ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்கும்படியும்,  அதேபோன்று, மின் சாதனங்கள் மற்றும் அதனைச் சார்ந்த அனைத்து இணைப்புகளையும் காலமுறைப்படி பரிசோதித்து, அதில் உள்ள குறைகளை கண்டறிந்து அவைகளை சரிசெய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடன் மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago