முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.எம்.கிருஷ்ணா பேச்சு தமிழர்களை ஏமாற்றும் நாடகம்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜன. 22 - இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை என்று எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேச்சு தமிழர்களை ஏமாற்றும் நாடகம்​ என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைப் போரை நிகழ்த்தி ஒன்றே முக்கால் லட்சம் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவிடமே, தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வலியுறுத்துவதும், அதற்கு செவிசாய்ப்பதுபோல் ராஜபக்சேவும், இலங்கை அரசமைப்புச் சட்டத்தில் 13​வது திருத்தத்திற்கும் அதிகமாகச் சென்று தீர்வுத் திட்டத்தை அளிக்கப்போகிறேன் என்று கூறுவதும் தமிழர்களை மட்டுமல்ல, உலக நாடுகளையும் ஏமாற்ற இந்திய மத்திய அரசும், இனவாத சிங்கள அரசும் இணைந்து அரங்கேற்றி வரும் கபட நாடகமாகும்.  

சமீபத்தில் இலங்கை நாடாளுமன்றத்தில் நிதி நிலை அறிக்கையின் மீது பேசிய ராஜபக்சே, நிலம், நிர்வாகம், காவல்துறை ஆகியவற்றின் மீதான எந்த அதிகாரமும் மாகாண சபைகளுக்கு அளிக்கப்போவதில்லை என்பதை உறுதியுடன் கூறியிருந்தார்.  அதே போல் தமிழர் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது என்றும் கூறியிருந்தார். இவை யாவும் அந்நாட்டு நாளிதழ்களிலும், இணையத் தளங்களிலும் தெளிவாக வெளியிடப்பட்ட செய்திகளாகும். அது மட்டுமல்லாமல் விடுதலைப்புலிகளை அழித்து விட்டோம். இதற்கு மேல் தமிழர்களுக்கு தீர்வு என்று கூறுவதற்கு ஏதுமில்லை என்று பட்டவர்த்தனமாக தெரிவித்துள்ளார். தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவையும், இலங்கை அரசையும் சர்வதேச மனித உரிமை நீnullதிமன்றத்தில் நிறுத்த பன்னாட்டு விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும் என்ற தமிழர்களின் கோரிக்கைக்கு உலக நாடுகளின் ஆதரவு பெருகி வரும் நிலையில், இரண்டு அரசுகளும் சேர்ந்து இப்படிப்பட்ட ஏமாற்று நாடகத்தை அரங்கேற்றுகின்றன என்பதை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். 

இலங்கைத் தீவில் சம உரிமையுடனும், முழுச் சுதந்திரத்துடனும் தமிழர்கள் வாழ வேண்டுமெனில் அதற்கு தனித் தமிழ் ஈழம் அமைப்பதே ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்ற உறுதியான இலக்கை நோக்கி நாம் தொடர்ந்து போராட வேண்டும்.  இன்றைக்குள்ள மத்திய அரசு தமிழினத்தின் நலன்களையும், உரிமைகளையும் முழுமையாக விட்டுத்தந்து இலங்கையுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது. எனவே இந்த அரசை நம்பி தமிழர்கள் ஏமாந்து விடக்கூடாது என்று நாம் தமிழர் கட்சி எச்சரிக்கிறது.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்