முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கேமராவில் கண்காணிக்கப்படும்

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.24 - டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகள் கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. புதிய தலைவராக பதவி ஏற்ற ஆர்.நடராஜ் கூறினார். அரசு பணியாளர் தேர்வாணையத்தில் ஆர். நடராஜ் நேற்று காலை பொறுப்பேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- அரசு என் மீது நம்பிக்கை வைத்து மிக முக்கியமான இந்த பணியை தந்துள்ளது. அதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அரசு பணி என்பது தெய்வீக பணியாகும். அது ஒரு கொடை. அந்த பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை திறமையாக பயன்படுத்துவேன். அரசு பணியில் சேர திறமை இருக்க வேண்டும். பணியில் சேருபவர்கள் தங்கள் பணியை நிறைவாக nullர்த்தி செய்ய வேண்டும். நேர்மையாக செயல்பட வேண்டும். திறமையும் நேர்மையும் மிக்கவர்கள் அரசு பணியில் சேரும் சூழ்நிலையை உருவாக்குவேன். நான் முதலில் செய்யப்போவது நாணயம் பெறாத நாணயமான சேவை. தேர்வாணையத்தில் உடனடியாக நிறைய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும். டி.என்.பி.எஸ்.சி. தேர்வு பற்றி ஒரு புகை மண்டலம் சூழ்ந்து நிற்கிறது. அந்த புகை மண்டலம் அகற்றப்படும். வெளிப்படையான நிர்வாகம் செய்யப்படும். டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடைபெறும் அறைகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். நேர்முகத் தேர்வின்போதும் கேமரா பொருத்தப்படும். ஆட்சேபனை இருப்பவர்கள் அதை பார்வையிட அனுமதி வழங்கப்படும்.

ஒவ்வொரு தேர்வும் முடிந்தவுடன் அந்த தேர்வுக்குரிய விடைகள் இணைய தளத்தில் உடனடியாக வெளியிடப்படும். அந்த விடைகள் பற்றி தேர்வு எழுதியவர்கள் குறைபாடுகளை சுட்டிக்காட்டினால் வல்லுனர் குழுவால் பரிசீலிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்ட விடைகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும். தேர்வு எழுதியவர்கள் திருத்தப்பட்ட விடைத்தாள்களை பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். இணையதளத்தில் மாதிரி வினாத்தாள் அனைத்து தேர்வுகளுக்கும் இது போன்ற கேள்விகள் கேட்கப்படும். எந்தெந்த பாடங்கள் கேட்கப்படும் என்பது பற்றிய பாடத்திட்டங்கள், மாதிரி வினாத்தாள்கள் இணைய தளத்தில் வெளியிடப்படும். ஆண்டுதோறும் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள பல்வேறு தேர்வுகள், தேர்வு முடிவுகள், வெளியாகும் உத்தேச தேதி ஆகியவற்றை உள்ளடக்கிய கால அட்டவணை வெளியிடப்படும்.

அரசு பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிப்பொறுப்புகளை கருத்தில் கொண்டு தேர்வுக்கான பாட திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்படும். பணிக்கு வருபவர்களின் பகுத்து அறியும் திறனை ஆராயும் வகையில் தேர்வு முறையில் உரிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும். தேர்வாணையம் மூலம் பல்வேறு தேர்வுகள் நடத்தினாலும் கல்வித் தகுதி ஒன்றாகவே இருக்கிறது. எனவே ஒருமுறை விண்ணப்பித்தால் போதும்,  அவர்களுக்கு ஒரு குறியீடு வழங்கப்படும். அடுத்த பதவிக்கு தேர்வு எழுத அந்த குறியீட்டின் அடிப்படையிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம். தேர்வாணைய இணைய தளம் புதுப்பிக்கப்படும். அதில் புதிதாக பல தகவல்கள் சேர்க்கப்படும். தேர்வாணையத்தின் செயல்பாடுகள், பணிக்கான விதிகள், பாடமுறை, மாதிரி விடைத்தாள்கள், முந்தைய வருட வினாத்தாள்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வெளியிடப்படும். ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் சில சட்ட சிக்கல்கள் இருக்கின்றன. அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தேர்வாணையத்துக்கென்று தனி விதிமுறைகள் உள்ளது. அதை அமுல்படுத்துவோம். அந்த விதிமுறைகளில் மாற்றம் தேவை என்றால் அரசிடம் முறையிட்டு மாற்றம் கொண்டு வரப்படும். லஞ்சம் கொடுக்காமல் நேர்மையாக அரசுப் பணியில் சேர முடியும் என்ற நம்பிக்கையை இளைஞர் சமுதாயத்துக்கு கொடுப்போம்.

நேர்மையாக படித்தால் நல்ல முறையில் தேர்வு எழுதினால் அரசுப்பணியில் சேர வாய்ப்பு இருக்கிறது என்ற நம்பிக்கையை இளைஞர்களுக்கு கொடுப்பேன். பகுப்பாய்வு மூலம் சிந்திக்கும் விதத்தில் தேர்வுகள் இருக்கும். தேர்வு முறையில் மாற்றங்களிருக்கும். ஒற்றைச்சாளர முறையைக் கொண்டுவர பரிசீலன்யில் இருக்கிறது. தேர்வு முடிவுகள் இணையதளங்களில் வெளியிடப்படும். ஒருதடவை தேர்வு எழுதும்போதே குறியீட்டுஎண் வழங்கப்படும். அதன்பின் அவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம். இப்போதுதான் நான் தலைமை பதவி ஏற்றுள்ளேன். எந்த தவறும் நிகழ விடமாட்டேன். தவறுகளை தட்டிக்கேட்பேன். இவ்வாறு ஆர்.நடராஜ் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!