முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

புதன்கிழமை, 25 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

ராமேஸ்வரம், ஜன.25 - ராமேஸ்வரம் கடல் பகுதியில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் மீனவர்கள் காயமடைந்ததுடன் படகுகளும் சேதமடைந்தன. அப்பாவி தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், அவர்களின் வலைகள் மற்றும் மீன்களை அபகரித்துச் செல்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இலங்கையின் அந்த அடாவடிச் செயல்கள் குறித்து தமிழக முதல்வர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பலமுறை கடிதம் எழுதியும் இதுவரை தமிழக மீனவர்கள் மீதான இந்த தாக்குதல்கள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில்கூட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கை சென்றிருந்தபோது இதுகுறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனாலும் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. 

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து 670 விசைப்படகுகளில் 2500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்ருந்தபோது அங்கு 3 கப்பல்களில் வந்த சிங்களப்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்தனர். மேலும் கற்களைக்கொண்டும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் மீனவர்கள் பயந்துபோய் மீன்பிடிக்காமல் ஏமாற்றத்துடன் ராமேஸ்வரம் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்கள் மீது மேலும் ஒரு தாக்குதலை நடத்தினர். இலங்கை மீனவர்கள் தங்கள் படகுகளில் இருந்த பெட்ரோல் குண்டுகளை சரமாரியாக தமிழக மீனவர்கள் மீது வீசினர். இதில் தமிழக மீன்பிடி விசைப்படகு ஒன்று பலத்த சேதமடைந்தது. இதுவரை இலங்கை கடற்படைதான் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திவந்தது. ஆனால் தற்போது இலங்கை மீனவர்களும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளது ராமேஸ்வரம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கிடையில் சிங்கள ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்ட 9 ராமேஸ்வரம் மீனவர்கள் முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால் விடுவிக்கப்பட்டனர்.  இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைத்தது. அவர்கள் அனைவரும் மண்டபம் அழைத்துவரப்பட்டனர். அவர்களைப் பார்த்த அவர்களது உறவினர்களும் மற்ற மீனவர்களும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!