முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம் ஊழல்: ராசா - 2 கம்பெனிகள் மீது 31 ம் தேதிக்குள் குற்றப்பத்திரிக்கை

வியாழக்கிழமை, 17 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

புது டெல்லி,மார்ச்.- 17 - ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை நாட்டுக்கு ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்ட மாஜி தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா மற்றும் 2 கம்பெனிகள் மீது வரும் 31 ம் தேதிக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விடும் என்று சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ தெரிவித்தது. அப்போது இந்த வழக்கு விசாரணையில் ஒரு சிறப்பு அரசு வழக்கறிஞராக தகுந்த, மூத்த வழக்கறிஞர் ஒருவரை நியமனம் செய்யுமாறு புலனாய்வு துறையை சுப்ரீம் கோர்ட் கேட்டுக் கொண்டுள்ளது.  உலகின் மிகப் பெரிய ஊழலாக கருதப்படுவது ஸ்பெக்ட்ரம் ஊழல். காரணம், இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட தொகை ரூ. 1.76 லட்சம் கோடியாகும். இவ்வளவு பெரிய தொகை நாட்டுக்கு இழப்பாக ஏற்பட தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ. ராசா தான் தனிப்பட்ட காரணம் என்று தணிக்கை துறை அதிகாரி வினோத்ராய் தனது அறிக்கையில் குறிப்பிட்ட பிறகுதான் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியதை அடுத்து ஆ. ராசா தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு அவரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது. 

இந்த சோதனையின் தொடர்ச்சியாக ஆ. ராசா மற்றும் 2 முன்னாள் செயலாளர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் 14 நாட்கள் நடத்திய விசாரணைக்கு பிறகு இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். பிறகு ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிகாரி பல்வாவும் கைது செய்யப்பட்டு அவரும் சிறையில் அடைக்கப்பட்டார். 

முன்னதாக ராசாவின் பினாமி எனக் கருதப்படும் சாதிக்பாட்சாவின் வீடுகளிலும் சி.பி.ஐ. சோதனை நடத்தியது தெரிந்ததே. இந்த சாதிக்பாட்சா சென்னையில் நேற்று மர்மமான முறையில் மரணமடைந்தார். இவர் அப்ரூவராக மாற இருந்ததாகவும் அதனால் கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது. இவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் வேறு சில தகவல்கள் கூறுகின்றன. எது எப்படி இருந்தாலும் சாதிக்பாட்சாவின் மர்ம மரணம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் மத்திய புலனாய்வுத் துறை விசாரணையின் தன்மை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் சீலிடப்பட்ட கவரில் தனது அறிக்கையை தாக்கல் செய்தது. 

இந்த அறிக்கை நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் சி.பி.ஐ. சில தகவல்களை தெரிவித்துள்ளது. அதாவது இந்த ஊழல் தொடர்பாக நடந்த விசாரணையின் போது பல புதிய உண்மைகள் தகவல்கள் கிடைத்திருப்பதாக சி.பி.ஐ. அதில் தெரிவித்துள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராசா மீதும் மற்றும் 2 கம்பெனிகள் மீதும் வருகிற 31 ம் தேதிக்குள் பிரதான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விடும் என்றும் சி.பி.ஐ. சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது. இது ஒரு ஆரம்பம்தான். மேலும் பலர் மீதும் மற்றும் பல கம்பெனிகள் மீதும் குற்றப்பத்திரிக்கை பின்னர் தாக்கலாகும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ.க்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் தெரிவித்தார். அப்போது இந்த விசாரணையில் சிறப்பு அரசு வழக்கறிஞராக தகுதி வாய்ந்த ஒரு மூத்த வழக்கறிஞரை நியமிக்குமாறு புலனாய்வு துறையை சுப்ரீம் கோர்ட் கேட்டுக் கொண்டது. ராசா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்