Idhayam Matrimony

கூட்டுறவு வங்கிகளில் வைப்புநிதி திரட்ட வேண்டுகோள்

புதன்கிழமை, 25 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.25 - கூட்டுறவு வங்கிகளில் ஒவ்வொரு நாளையும் இனி வைப்புநிதி திரட்டும் நாளாக கடைப்பிடிக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். சென்னையில் தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் சார்பில் வைப்புநிதி திரட்டும் விழா நடந்தது. விழாவில் சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி, மயிலை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு ஆற்றிய சிறப்புரை வருமாறு:-

இந்திய நாட்டின் ஆணி வேராகத் திகழும் தொழில், வேளாண் தொழில், அத்தகைய சிறப்புமிக்க வேளாண் தொழில் செழித்தோங்க, கூட்டுறவு வங்கிகள், ஆற்றிடும் பணி  ஈடு இணையற்றது. நம் நாட்டில் கிராமங்கள் வரை ஊடுருவிச் சென்று, ஏழை, எளிய மக்களுக்கு, வங்கிச் சேவைகளையும், விவசாயக் கடன் வசதிகளையும், வழங்கி வரும் மாபெரும் கட்டமைப்பினைக் கொண்டவை தான் கூட்டுறவு வங்கிகள்! பசுமைப் புரட்சியிலும் சரி, ஏழை, எளிய கிராமப்புற மக்களுக்கு, வங்கிச் சேவைகளை வழங்குவதிலும் சரி, கூட்டுறவு வங்கிகளின் பங்கு மகத்தானது.

நம் தமிழகத்தைப் பொறுத்தவரை, ஒரு தலைமைக் கூட்டுறவு வங்கி, 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள், 120 நகரக் கூட்டுறவு வங்கிகள், 4538 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் என மிகவும் பலமான கட்டமைப்புடன் கூட்டுறவு கடன் அமைப்புகள் உள்ளது. பற்பல ஆண்டுகள், பாரம்பரியத்துடன், நகரங்கள் முதல் கிராமங்கள் வரை மக்களுக்கு சேவையும் ஆற்றி வருகின்றன.

தற்போது, தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் வைப்பீட்டுத் தொகை, ரூ.6 ஆயிரத்து 255 கோடியாகவும், வழங்கிய கடன்களின் நிலுவைத் தொகை ரூ.5 ஆயிரத்து 928 கோடியாகவும் உள்ளது. மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின், வைப்பீட்டுத் தொகை ரூ.14 ஆயிரத்து 169 கோடியாகவும், அது வழங்கிய கடன்களின் நிலுவைத் தொகை ரூ.19 ஆயிரத்து 72 கோடியாகவும் உள்ளது. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் வைப்பீட்டுத் தொகை, ரூ.4 ஆயிரத்து 745 கோடியாகவும், அது வழங்கிய கடன்களின் நிலுவைத் தொகை ரூ.12 ஆயிரத்து 463 கோடியாகவும் உள்ளது. இதேபோல், நகரக் கூட்டுறவு வங்கிகளின், வைப்பீட்டுத் தொகை ரூ.4 ஆயிரத்து 203 கோடியாகவும், வழங்கிய கடன்களின் நிலுவைத் தொகை ரூ.3 ஆயிரத்து 810 கோடியாகவும் உள்ளது.

வங்கிகளின் வணிகம் என்பது, இன்றைய சூழ்நிலையில், மிகுந்த போட்டிகள் நிறைந்ததாக உள்ளது. 1991ஆம் ஆண்டுக்குப் பிறகு, பல தனியார் மற்றும் அயல் நாட்டு வங்கிகள், நம் இந்திய நாட்டில் வங்கி வணிகத்திற்குள் நுழைந்துவிட்டன. வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கத்துடன், அதிநவீன தொழில்நுட்பங்கள், வங்கிச் சேவை, வளையத்திற்குள் வந்து விட்டன. இதனால் இளைய தலைமுறையினரும் பொதுமக்களும் அத்தகைய வங்கிகளை நாடிச் செல்கின்றனர். எனவே, கூட்டுறவு வங்கிகளும், நவீன தொழில்நுட்பங்களுடன், செயல்பட வேண்டியது, காலத்தின் கட்டாயமாகி விட்டது. இதனை நன்கு உணர்ந்த தமிழக முதல்வர்  ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அவரது ஆணையின்படி, இணையதளம் வாயிலாக வழங்கப்படும், அதிநவீன, வங்கிச் சேவையான மின்னணு வங்கியியற் சேவை, இந்தியாவில் உள்ள மாநிலக் கூட்டுறவு வங்கிகளிலேயே, நம் தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியில் தான், முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதனை இங்கே பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன். இதன் விளைவாக, தமிழகத்தில் உள்ள, கூட்டுறவு வங்கிகளுக்கு இடையே மிக வேகமாக பணப்பரிமாற்றம் செய்துகொள்ள முடியும்.

நம் தேசத்தில், தற்போது நிதிநிலை, உட்சேர்க்கை, புதிய முழக்கமாக, வங்கிகள் மத்தியில் பரவி வருகிறது. நாட்டில் உள்ள, ஏழை, எளிய, கிராமப்புற மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும், வங்கிச் சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்பது தான், இதன் நோக்கம் ஆகும். ஆனால், காலங்காலமாக நம் கூட்டுறவு வங்கிகள், இந்தச் சேவையினை ஆற்றி வருகின்றன, என்பதுதான், நிதர்சனமான உண்மை. கிராமங்கள் உட்பட நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஊடுருவிச் செயல்படும் அமைப்புதான் கூட்டுறவு கட்டமைப்பாகும். இந்த அமைப்பை முறையாகப் பயன்படுத்தி, கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கும், பல்வேறு வங்கிச் சேவைகளை, கிடைக்கச் செய்திட வேண்டும் என்பது, தொலை நோக்குச் சிந்தனை கொண்ட தமிழக முதல்வரின் நோக்கமாகும். அதன் ஓர் அங்கமாக, இன்றைக்கு தமிழ்நாட்டில் நுண் காப்பீட்டுத் திட்டம், கூட்டுறவு வங்கிகள் வாயிலாக துவங்கப்பட்டுள்ளது, என்பதனை இங்கே பெருமையுடன், குறிப்பிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இதன் மூலமாக கிராமப்புற, ஏழை, எளிய மக்கள் உள்ளிட்ட, அனைத்து தரப்பு மக்களும், குறைந்த தவணைத் தொகைகளில், சிறந்த காப்பீட்டுத் திட்டங்களைப் பெற முடியும்!

ஜெயலலிதாவின் தலைமையில் அமைந்துள்ள அரசு, கூட்டுறவு வங்கிகள் மீது எவ்வளவு அக்கறையும், நம்பிக்கையும், வைத்துள்ளது என்பதற்கு இரு உதாரணங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அண்மையில் நிகழ்ந்த இயற்கைச் சீற்றமான தானே புயலின் தாக்குதலால் தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை, அனைவரும் அறிவீர்கள். இரக்க உணர்வும், தாயுள்ளமும் கொண்ட முதல்வர்,  உரிய புயல் நிவாரண உதவிகளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என முடிவெடுத்த பிறகு, அதனைக் கூட்டுறவு வங்கிகள் வாயிலாகத்தான் வழங்க வேண்டும், என முடிவெடுத்து செயல்படுத்தியுள்ளார். அது மட்டுமல்ல, நாட்டின் விவசாய உற்பத்தியின் மீதும் விவசாயப் பெருங்குடி மக்கள் மீதும், அளவிட முடியாக அக்கறை கொண்டுள்ள, முதல்வர் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை, பேணிப் பாதுகாத்திட, தமிழகமெங்கும் ஆயிரக்கணக்கான கிடங்குகள் கட்டப்பட வேண்டும் எனக் கூறியதுடன், அதற்காக மானியம் வழங்கி, கூட்டுறவு வங்கிகள் வாயிலாகத்தான், அத்தகைய கிடங்குகளை, கட்டி முடித்திட வேண்டும், என உத்தரவிட்டுள்ளார், என்பதனை இங்கே மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகிறேன்!

முதல்வர் ஜெயலலிதாவின் 3வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 8 மாத காலத்திற்குள், தமிழ்நாட்டில் உள்ள, மத்தியக் கூட்டுறவு வங்கிகளின், வைப்பு நிதி ஏறத்தாழ ஆயிரத்து 150 கோடியை எட்டியுள்ளது என்பதனை, இங்கே மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகிறேன். அதே போன்று, இந்த வங்கிகள் வாயிலாக வழங்கப்பட்டுள்ள, விவசாயக் கடன்கள் உள்ளிட்ட, அனைத்து கடன்களும், ஏறத்தாழ ஆயிரத்து 300 கோடியாக உயர்ந்து, ரூ.19 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது என்பதனையும், இந்த நேரத்தில் பெருமையுடன் பதிவு செய்கிறேன்.

இத்தகைய சூழலில்தான், அகில இந்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம், கூட்டுறவு வங்கிகளின் நிதி நிலையை மென்மேலும் உயர்த்தி, பலப்படுத்தும் நோக்கத்தோடு, இந்த முனைப்புமிகு, வைப்பு நிதி திரட்டும், விழாவினை துவக்கியிருக்கிறார்.  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் சீரிய அறிவுறுத்தலின் பேரில், கூட்டுறவு வங்கிகளின், நிதி நிலையை, உயர்த்தும் நோக்கத்தோடு, கூட்டுறவுத்துறை உயரதிகாரிகள், நேரடியாகக் களத்தில் இறங்கி சிறப்புற பணியாற்றி வருகிறார்கள். அரசின் இந்த முயற்சியின், ஓர் அங்கமாக தங்கள் தொழிற்சங்க அமைப்பும், செயல்படுவதற்காக, எனது பாராட்டுக்களை, தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு தொழிற்சங்க அமைப்பு என்பது, ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, மற்றும் இதரப் பணப் பயன்களுக்காக போராடும் என்பதுதான், பொதுவான பார்வை. ஆனால், தாங்கள் சார்ந்திருக்கிற நிறுவனங்கள், மேன்மையுற வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தோடும், பொறுப்புணர்வோடும், இப்படிப்பட்ட விழாவை நிகழ்த்துகிற, இந்த தொழிற்சங்க அமைப்பைப் பார்த்து, நான் வியப்படைகிறேன்! பெருமைப்படுகிறேன்! உளமார பாராட்டுகிறேன்!

கூட்டுறவு வங்கிகள், தங்கள் நிதி நிலையினை, நல்ல நிலைக்கு உயர்த்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும், ஒவ்வொரு கூட்டுறவு வங்கியாளரும், தெளிவுற உணர்ந்திட வேண்டும்.

இத்தருணத்தில் இங்கே மூன்று முக்கியமான கருத்துக்களை, நான் பதிவு செய்ய விரும்புகிறேன்!

முதலாவதாக, இனி வரும் காலங்களில், வங்கிகள் வழங்கும் கடன்கள், உற்பத்தியைப் பெருக்கும் கடன்களாக அமைய வேண்டும். இதனால், நாட்டின் பொருளாதாரம் உயரும். வேலை வாய்ப்பும் அதிகரிக்கும். நமது நாட்டின் மக்கள் தொகையினை கருத்தில் கொண்டு, இத்தகைய கடன் வசதிகள், வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.

இரண்டாவதாக, இன்றைய சூழலில், நம் நாட்டின் உணவு உற்பத்தியில், தன்னிறைவு அடைவதும், நமது மக்களின், உணவுத் தேவைகளைப் ர்த்தி செய்வதும், காலத்தின் கட்டாயமாக உள்ளது. உடல் ரீதியான, உழைப்பைக் கடந்து, விவசாயம் சார்ந்த இயந்திரங்களின் துணையோடு, வேளாண் தொழிலை மேம்படுத்த வேண்டிய சூழலில், நாம் இருக்கிறோம். தொன்றுதொட்டு, விவசாயம் சார்ந்த கடன்கள் வழங்குவதில், முன்னிலை வகித்துவரும் நமது கூட்டுறவு வங்கிகள், இத்தகைய, நவீன விவசாய முறை செழித்தோங்க, நிறைய கடன் வசதிகள் செய்து தர வேண்டும். விவசாயம் சார்ந்த கடன்கள், வழங்குவதை அதிகரிக்க வேண்டும். இதற்கு கூட்டுறவு வங்கிகள், தங்கள் நிதி நிலையை மென்மேலும், உயர்த்திக் கொள்ள வேண்டியது, மிகமிக அவசியமாகும்.

மூன்றாவதாக, இன்றைய வாழ்க்கைச் சூழலில், குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பு, சொந்த வீடு, வீட்டிற்குத் தேவையான பொருட்கள், எனத் தேவைகள் பெருகிவருவதற்கு ஏற்ப, அவரவர் சம்பாத்தியதற்கு ஏற்ப, கடன் தேவைகளும் பெருகிவருகின்றன. இதற்காக வங்கிகள், தங்கள் சுய நிதிநிலையை உயர்த்திக் கொள்ள, பல்வேறு யுக்திகளைக் கையாள்கின்றன.

இந்த மூன்று முக்கிய காரணங்களுக்காக, நமது கூட்டுறவு வங்கிகள், தங்கள் நிதி நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டியது இன்றியமையாத ஒன்று. 

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி, எந்த நிலையில் உள்ளது என்பதனை, அதே போன்ற மற்ற அமைப்புகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போதுதான் அறிந்துகொள்ள முடியும். அந்த வகையில், பார்க்கும்போது, நமது மாநிலத்தில் உள்ள, கூட்டுறவு வங்கிகளில் சேமிப்புக் கணக்குகளையும், நடப்புக் கணக்குகளையும், உள்ளடக்கிய குறைந்த செலவின வைப்பு நிதிகள் ஏறத்தாழ 17 விழுக்காடுகளே உள்ளன. ஆனால் தனியார் மற்றும் அயல் நாட்டு வங்கிகள் உள்ளிட்ட பிற வங்கிகளில் இவ்வகை நிதிகள் 40 விழுக்காடுகள் வரை உள்ளன. அதே போன்று சேவைக் கட்டணங்கள் வாயிலாக வங்கிக்கு, வரக்கூடிய வருமானம், கூட்டுறவு வங்கிகளில், ஏறத்தாழ 4 விழுக்காடுகளுக்கு மேல் இல்லை. ஆனால் மற்ற வங்கிகளில், இத்தகைய வருமானம் குறைந்தபட்சம் 23 விழுக்காடுகளுக்கு மேல் உள்ளது. கூட்டுறவு வங்கிகளின், வைப்பு நிதி வளர்ச்சி என்பது ஆண்டொன்றுக்கு, 10 விழுக்காடுகளுக்கு மேல் இல்லை. ஆனால் பொதுத்துறை வங்கிகளில், இந்த வளர்ச்சி 28 விழுக்காடுகளுக்கு மேல் உள்ளது. இத்தகைய சூழலில்தான், இந்த முனைப்புமிகு வைப்பு நிதி திரட்டும் விழா நடத்தப்படுகிறது.

இன்றைக்கு இருக்கக் கூடிய, வங்கி வணிகச் சூழ்நிலைகளை, கூட்டுறவு வங்கியாளர்கள், நன்கு புரிந்துகொள்ள வேண்டும். இப்போதெல்லாம், பொதுமக்கள் வங்கிகளை தேடிச் செல்வதில்லை. வங்கிகள்தான், பொதுமக்களை தேடிச் செல்கின்றன. பொதுமக்களின் கைபேசியில், அவர்களை அழைத்து, கடன்கள் வழங்கும் காலமாகிவிட்டது. அதுபோன்று நமது கூட்டுறவு வங்கிகள், வங்கி வணிகம் என்கிற போட்டி யுகத்தில், ஓடுகிற வங்கிகளோடு, ஓட வேண்டிய கட்டாயமான, சூழ்நிலை தற்போது உள்ளது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஓடி, ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும் என்று பாடியதைப் போல, கூட்டுறவு வங்கியாளர்கள் ஓடி, ஓடி உழைத்து, வைப்பு நிதி திரட்டி, ஊருக்கெல்லாம் உற்பத்திக் கடன்கள் கொடுக்க வேண்டும். முன்பெல்லாம், ஆண்டுக்கு ஒரு முறை, ஒரு வாரம், அல்லது இரு வாரங்கள் வைப்பு நிதி திரட்டும் விழா நடத்துவார்கள். அது போன்ற முயற்சிகள், இனி பலன் தராது. இனி ஒவ்வொரு நாளும், வைப்பு நிதி திரட்டும் விழா நாளாக கடைபிடிக்கப்பட வேண்டும். கூட்டுறவு வங்கியாளர்கள், பொதுமக்களை நாடிச் சென்று சந்திக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளின் வாடிக்கையாளர்களின் வட்டம் பரந்து விரிந்திட வேண்டும். குறிப்பாக, இளைய தலைமுறை வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த வேண்டும். ஒவ்வொரு வங்கியாளரும், நாம் தான் இந்த கூட்டுறவு இயக்கத்தின் உறுதுணையான அங்கம் என சிந்தனை, செயல், அனைத்திலும் கலந்திடச் செய்திடவேண்டும். கூட்டுறவு வங்கிகள், வீறுகொண்டு எழுந்த, ஒரு துவக்கமாக இந்த விழா அமைந்திட வேண்டும். வைப்புநிதி வளர்ச்சியில் அளப்பரிய வெற்றியை அடைந்து, அதற்கான வெற்றி விழா இதே போன்று நிகழ்ந்திட வேண்டும் என்று எனது வாழ்த்துக்களைக் கூறி விடை பெறகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்