முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.சி-எஸ்.டி மாணவர்கள் திறன் வளர்க்க நிதிஒதுக்கீடு

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.26 - சமுதாயத்தில் நலிவுற்ற நிலையில் வாழும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களை பாதுகாக்கும் வகையில்  கல்வி உதவிகள், வேலைவாய்ப்பு வசதிகள், பொருளாதார உதவிகள் உள்பட பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர்கள் பயன்பெறும் வகையில் அவர்களின் திறன் வளர்க்கும் பயிற்சிக்காக தமிழக அரசு சிறப்பு நிதி உதவி திட்டம் ஒன்றினை தாட்கோ மூலம்  செயல்படுத்தி வருகிறது.  இத்திட்டத்தின் செயல்பாட்டிற்காக 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர்,  பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் கனரக ஓட்டுநர் பயிற்சி சென்னை தரமணியிலுள்ள அரசு சாலை போக்குவரத்து நிறுவனம் மூலம் வழங்கப்படும்.

மேலும் ஆரம்ப நிலை திறன் பயிற்சிகளான ஜேசிபி, பொக்கலின், போர்க் லிப்ட், ஆகியவற்றை இயக்குவதற்கான பயிற்சி, மின் பணியாளர், ஏ.சி.மெக்கானிக், டீசல் மெக்கானிக், பிட்டர், மோட்டார் மெக்கானிக் மற்றும் கணினி பயிற்சிகள் மாநில அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் மூலம் வழங்கப்படும்.  இதே போல், அழகுக்கலை, தையல் கலை போன்ற பயிற்சிகள் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அங்கீகாரம்  பெற்ற நிறுவனங்கள் மூலம் அளிக்கப்படும். இப்பயிற்சிகள் 2,350 ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிட இளைஞர்களுக்கு 2 கோடியே 58 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

தேசிய நிறுவனங்கள் மூலம் ஆயத்த ஆடை வடிவமைப்பு பயிற்சி, பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி, காலணி மற்றும் தோல் தயாரிக்கும் பயிற்சி, திரைப்படத்துறை சார்ந்த பயிற்சி ஆகிய பயிற்சிகள் 1,500 ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிட இளைஞர்களுக்கு 2 கோடியே 7 லட்சம் ரூபாய் செலவில் அளிக்கப்படும்.

மேலும், உணவு தயாரித்தல் மற்றும் உணவு பரிமாறல் போன்ற பயிற்சிகள், மாநில உணவக மேலாண்மை மற்றும் உணவாக்க தொழில் நுட்பவியல், துவாக்குடி என்ற நிறுவனத்திலும் மற்றும் தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கட்டுப்பாட்டில் அங்கீகாரம் பெற்ற தொழிற் பயிற்சிப் பள்ளிகள் மூலமும் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சி 1,500 நபர்களுக்கு 1 கோடியே 30 லட்சம் ரூபாய்  செலவில் வழங்கப்படும்.

உதவி செவிலியர் மற்றும் மகப்பேறு உதவியாளர் பயிற்சி, கண் கண்ணாடியக சான்றிதழ் பயிற்சி மற்றும் மருத்துவ ஆய்வுக்கூட தொழில் நுட்பப் பயிற்சி அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மூலம் 400 நபர்களுக்கு 97 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

மேலும், ஆதி திராவிடர் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர் மாணவ மாணவியர்களுக்காக கணினி சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளிலும் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மூலம் 5,500 நபர்களுக்கு 6 கோடியே 13 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் பயிற்சி அளிக்கப்படும்.  மேலும், பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளில் இறுதியாண்டு பயின்று வரும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய  கிருத்துவ ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு என்ற பயிற்சி 4,000 நபர்களுக்கு 2 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் அளிக்கப்படும்.

இதுவன்றி, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிட இளைஞர்கள் மென் திறன் பெறுவதற்கும், ஆங்கில பேச்சாற்றல்  திறன் பெறுவதற்கும், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் விடுதிகளில் தங்கி பட்டப்படிப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கும், ஆதி திராவிட பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயிலும் 9, 11 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கும் வழங்கப்படும். உயர்கல்வி நிறுவனங்களுக்கான நுழைவு தேர்வுகளில் பங்கு கொண்டு தேர்ச்சிப் பெறுதலுக்கான பயிற்சி, பட்டயக் கணக்கர்/செலவு கணக்கர் படிப்புகளில் பங்கு கொண்டு மாணவ மாணவியருக்கு பயிற்சி பெறுவதற்கான கட்டணங்கள் வழங்குதல், போன்ற நுழைவுத் தேர்வுகளில் பங்கு கொள்வதற்கான பயிற்சிகள், வங்கி பணிக்கான தேர்வுகள், காப்பீட்டு கழகங்களின் பணிக்கான தேர்வுகள் போன்ற தேர்வுகளில் பங்கு பெறுவதற்கான பயிற்சிகள் 5,910 நபர்களுக்கு  2 கோடியே 64 லட்சம் ரூபாய் செலவில் அளிக்கப்படும்.   மேலும், தொலை தொடர்புத்துறையில் வேலை வாய்ப்பினை பெறும் வகையில்  தொலை தொடர்பு சார்ந்த பயிற்சிகள் 50 நபர்களுக்கு 25 லட்சம் ரூபாய் செலவில் அளிக்கப்படும். 5 ஆம் வகுப்பு முடித்து 6 ஆம் வகுப்பு செல்லும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ, மாணவியர்களை ஒரு தனித்தேர்வு நடத்தி வட்டாரத்திற்கு ஒரு மாணவர் வீதம் தேர்ந்தெடுத்து, மொத்தமுள்ள 385 வட்டாரங்களில் 385 மாணவ,மாணவியரை நற்பெயர் பெற்ற சிறந்த உண்டு உறைவிடப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பில் சேர்த்து 12 ஆம் வகுப்பு வரை பயிலும் திட்டத்தின் கீழ் 1,540 மாணவ, மாணவியர்கள் சேர்க்கப்படுவர்.  இத்திட்டம் 5 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். அதிக அளவில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிட மக்களுக்கு, தையல் இயந்திரம், சலவைப் பெட்டி மற்றும் தச்சுக் கருவிகள் ஆகிய தொழிற் கருவிகளை வழங்குவதற்காக தற்போதுள்ள கிராமப்புற மக்களுக்கான வருமான வரம்பினை 16,000 ரூபாயிலிருந்து 40,000 ரூபாயாக உயர்த்தியும், நகர்ப்புறங்களில் உள்ளவர்களுக்கான வருமான வரம்பு 24,000 ரூபாயிலிருந்து 60,000 ரூபாயாக  உயர்த்தியும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.    மைய அரசின் கல்வி உதவித் தொகை பெற இயலாத, கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்கு 10 ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட படிப்பிற்கான சிறப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் விடுதியில் தங்காது படிக்கும் மாணவ, மாணவியருக்கு  மாதந்தோறும் வழங்கப்படும் பராமரிப்புபடி, தொழில் நுட்பப் படிப்பு படிப்பவர்களுக்கு 125 ரூபாயிலிருந்து 175 ரூபாயாக உயர்த்தியும், முதுகலைப் பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு 125 ரூபாயிலிருந்து 140 ரூபாயாக உயர்த்தியும், பட்டப் படிப்பு படிப்பவர்களுக்கு 65 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்த்தியும், பட்டயப் படிப்பு படிப்பவர்களுக்கு 125 ரூபாயிலிருந்து 140 ரூபாயாக உயர்த்தியும், 1, 2 மற்றும் சான்றிதழ் படிப்பு படிப்பவர்களுக்கு 65 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்த்தியும் வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இதனால் 42,444  கிருத்துவ மதம் மாறிய ஆதி திராவிட மாணவ, மாணவியர் பயன் அடைவார்கள்.  இதேபோன்று விடுதியில் தங்கி பயிலும் மாணவ  மாணவியருக்கு மாதாந்தோறும் வழங்கப்பட்டு வரும் பராமரிப்பு படி, தொழில் நுட்பப் படிப்பு படிப்போருக்கு 280 ரூபாயிலிருந்து 350 ரூபாயாக  உயர்த்தியும், முதுகலைப் பட்டம் படிப்போருக்கு 175 ரூபாயிலிருந்து 225 ரூபாயாக உயர்த்தியும், பட்டப்படிப்பு படிப்போருக்கு 115 ரூபாயிலிருந்து 175 ரூபாயாக உயர்த்தியும், பட்டயப்படிப்பு படிப்போருக்கு 175 ரூபாயிலிருந்து 225 ரூபாயாக உயர்த்தியும், 1, 2 மற்றும் சான்றிதழ் படிப்பு படிப்போருக்கு 115 ரூபாயிலிருந்து 175 ரூபாயாக உயர்த்தியும் வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் 28,296 மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.   இந்த உதவித்தொகை அதிகரிப்பின் மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு கூடுதல் செலவினம் 3 கோடியே 53 லட்சத்து 55 ஆயிரத்து 50 ரூபாய் ஏற்படும்.                                                           

மேற்கூறிய அரசின் நடவடிக்கைகள் மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவ, மாணவியர்கள் அதிக அளவில் வேலைவாய்ப்பினை பெறுவதற்கான வழிவகைகள் ஏற்படும்.  படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை அதிகரிப்பினால் மாணவ, மாணவியர் இடைனிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில இயலும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!