முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7 பேருக்கு தமிழக அரசின் சார்பில் விருதுகள்

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஜன.27 - தமிழக அரசின் சார்பில் இளம்பெண் அறிவியலார் விருது 6 பேருக்கும் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதும் இன்று வழங்கப்படுகிறது.  தமிழக அரசு பெண் விஞ்ஞானிகளை கவுரவிக்கும் விதத்தில் தமிழ்நாடு இளம் பெண் அறிவியலார் விருதினையும் தமிழ்நாடு வாழ்நாள் சாதனையாளர் விருதினையும் அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த பல்வேறு உயர்கல்வி துறைகளில் பங்களிப்பாற்றும் பெண்களுக்கு வழங்கி வருகிறது. இந்த விருதின் முக்கிய நோக்கம் தங்கள் துறையில் சிறப்பாக பணியாற்றும் பெண் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிப்பதாகும்.

ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழுடன் கூடிய இந்த விருது வேளாண்மை அறிவியல், சுற்றுசூழல் விஞ்ஞானம், சார்ந்த 7 துறைகளுக்கு வழங்கப்படுகிறது. 

இந்த ஆண்டு மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி டாக்டர்.கங்கா ராதாகிருஷ்ணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் டாக்டர் மரகதம், அண்ணாமலை பல்கலைக்கழக இணை பேராசிரியர் டாக்டர் எஸ்.மலர்விழி, பெரம்பலூர் பருத்தி ஆய்வக துணை பேராசிரியர் டாக்டர் ஷீரின் ஜெனிதா ராஜம்மாள், பெரியார் பல்கலைக்கழக துணை பேராசியர் டாக்டர் டி.பூங்கொடி விஜயகுமார், அழகப்பன் பல்கலைக்கழக துணை பேராசியர் டாக்டர் கே.பாண்டிமாதேவி, அண்ணா பல்கலைக்கழக கணிதப்பிரிவு துணை பேராசியர் டாக்டர் விமலா மணிவாசகம், சவிதா பல்கலைக்கழக வேதியல் துறை துணை பேராசிரியர் டாக்டர் கே.உதய லட்சுமி உட்பட 7 பேருக்கு தமிழ்நாடு இளம் பெண் அறிவியலார் 2010 க்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான விருதுகள் இன்று 27 ம் தேதி காந்திமண்டபம் சாலையில் உள்ள அண்ணா ஜெம் சயின்ஸ் பார்க் பள்ளியில் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது. உயர்கல்வி துறை சார்பில் நடைபெறும் இந்த விழாவில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், சென்னை அறிவியல் விழா - 2012 ஐ துவக்கி வைத்து இந்த விருதுகளை வழங்குகிறார். இந்த விழாவிற்கு உயர்கல்வித்துறை கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் டி.எஸ்.ஸ்ரீதர் தலைமை தாங்குகிறார். இந்த விழாவில் அரசுத்துறை உயர்கல்வி அதிகாரிகளும்,விஞ்ஞானிகளும் கலந்து கொள்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!