முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேராசிரியர் மீது தாக்குதல்: பா.ம.க. ராமதாஸ் மீது வழக்கு

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

திண்டிவனம், ஜன.27 - திண்டிவனத்தில் பேராசிரியர் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தனூர் ஒலியும்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகன் மாயக்கிருஷ்ணன்(30). இவர் திண்டிவனம் அருகே உள்ள கோனேரிகுப்பம் கிராமத்தில் உள்ள வன்னிய அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். 

சம்பவத்தன்று மாயக்கிருஷ்ணன் கல்லூரிக்கு பணிக்கு வந்த போது, கல்லூரி மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டி விட்டதாக குற்றம் சாட்டி பணியை ராஜினாமா செய்யுமாறு கல்லூரி நிர்வாகம் கூறியதாக தெரிகிறது. ஆனால் சரியான காரணம் தெரியாமல் பணியை ராஜினாமா செய்யமாட்டேன் என்று மாயக்கிருஷ்ணன் கூறியதாக கூறப்படுகிறது. 

அப்போது பணியை ராஜினாமா செய்யாவிட்டால் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆள் வைத்து அடிக்க சொல்லியுள்ளார் என்று கூறியபடி வன்னியர் அறக்கட்டளை இயக்குனர் அரிநாராயணன் மற்றும் அலுவலக உதவியாளர் வெங்கடேசன் ஆகிய 2 பேரும் சேர்ந்து மாயக்கிருஷ்ணனை தாக்கியதாக கூறப்படுகிறது. 

இதில் காயம் அடைந்த மாயக்கிருஷ்ணன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

மேலும் இது குறித்து மாயக்கிருஷ்ணன் திண்டிவனம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் குப்புசாமியிடம் புகார் செய்தார். துணை கண்காணிப்பாளர் குப்புசாமி அந்த புகார் மனுவை ஓலக்கூர் காவல்

 நிலையத்திற்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டார்.

இதையடுத்து ஓலக்கூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சுதாகர், உதவி ஆய்வாளர் பாபு ஆகியோர்  வன்னியர் அறக்கட்டளை இயக்குனர் அரி நாராயணன், அலுவலக உதவியாளர் வெங்கடேசன் மற்றும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் இது குறித்து தகவல் அறிந்த பாட்டாளி மக்கள் கட்சியினர் ஓலக்கூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை விழுப்புரம் டி.எஸ்.பி. சேகர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!