முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலமைச்சர் கோப்பைக்காக மாநில அளவில் தடகள போட்டி

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஜன.27 - விளையாட்டுத் துறையை ஊக்குவிக்க முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  விளையாட்டு என்பது இளைஞர்களின் உடலையும், மனதையும் நலம் பெறச் செய்வதோடு மட்டுமல்லாமல், நம் நாட்டின் பெருமையை தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் இடம் பெறச் செய்வதிலும், மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளுக்கிடையே நல்லெண்ணம்,  நட்புறவு ஆகியவற்றை வளர்ப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகம் அளித்து, ஊக்குவித்து, வீரர்களிடையே போட்டி மனப்பான்மையையும் வெற்றி பெறும் அணுகு முறைகளையும் வளர்த்து, விளையாட்டுத் துறையில் தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்ய பல புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.  திறமைமிக்க விளையாட்டு வீரர்களை கண்டறிந்து, தேசிய மற்றும் பன்னாட்டு போட்டிகளில் அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு தக்க பயிற்சி மற்றும் நிதியுதவி அளித்தல்;  தலைசியில் ஊக்க சலுகைகளை வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் விளையாட்டு வீரர்கள் உயர்ந்த அளவில் சாதனைகள் புரிந்திடுவதை ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

இதன் அடிப்படையில் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் பெற வாய்ப்புள்ள, திறன் வாய்ந்த சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை உருவாக்குவதற்காக சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை என்ற ஒரு திட்டத்தை துவக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்தத் திட்டத்தின்படி, ஐந்து விளையாட்டு வீரர்கள் /வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இவர்களை சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் பெற தயார் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  விளையாட்டு வீரர்கள் /வீராங்கனைகள் வெளிநாடுகளில் போட்டிகளில் பங்கேற்கவும், விஞ்ஞான ரீதியில் சிறப்பு பயிற்சி பெறவும், உயர்தர விளையாட்டு கருவிகள்  மற்றும் பயிற்சிக் கருவிகள் வாங்கிடவும், சத்தான உணவு பெற்றிடவும், விளையாட்டு வீரர்களின் பயிற்றுநர்களின் திறனை மேம்படுத்தவும் ஆண்டு ஒன்றுக்கு 1 கோடியே 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் விளையாட்டுகளில் அதிக அளவில் பங்குபெறுதலை ஊக்குவிப்பதற்காக, தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் உதவித்தொகையை 5,000/​ ரூபாயிலிருந்து 10,000/​ ரூபாயாக உயர்த்தியும், கல்லூரி மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் உதவித் தொகையை 6,500/​ ரூபாயிலிருந்து 13,000/​ ரூபாயாக உயர்த்தியும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 39 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் செலவினம் ஏற்படும்.  மேலும், தமிழகத்தில் உள்ள தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வண்ணம், முதலமைச்சர் கோப்பைக்காக மாநில அளவில் நடத்தப்படும் 20 வகையான தடகள விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று முதல் பரிசு பெறும் ஒவ்வொரு வீரர்/ வீராங்கனைக்கும் தலா 1 லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசு வெல்பவர்களுக்கு தலா 75,000/​ ரூபாயும், மற்றும் மூன்றாம் பரிசு வெல்பவர்களுக்கு தலா 25,000/​ ரூபாயும், பரிசுத் தொகையாக வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக தொடர் செலவினமாக 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராம அளவில் சிறப்பாக திகழும் விளையாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு, சென்னை நீங்கலாக 31 மாவட்டங்களில், மாவட்டம் ஒன்றுக்கு, ஒரு கிராமம் வீதம், 31  கிராமங்களை தேர்ந்தெடுத்து, அக்கிராமங்களில் பிரபலமாக உள்ள விளையாட்டிற்கு ஏற்ப, விளையாட்டு மைதான வசதி ஏற்படுத்திட ஒவ்வொரு கிராமத்திற்கும் தொடராச் செலவினமாக  1 லட்சம் ரூபாயும், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் உயர்தரப் போட்டிகளில்  கிராமங்களில் உள்ள இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் விளையாட்டு பயிற்சி அளித்திட தொடர் செலவினமாக 1 லட்சம் ரூபாயும் என 31 கிராமங்களுக்கு 62 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அரசின் இந்த நடவடிக்கைகள், பன்னாட்டு மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் அதிக அளவில் தமிழக வீரர்கள் /வீராங்கனைகள் பங்கேற்க வழி வகுக்கும் என முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்