முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி வழக்கில் சிதம்பரத்தை சேர்க்கலாமா வேண்டாமா சி.பி.ஐ. கோர்ட்டு தீர்மானிக்கும்

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2012      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, பிப்.- 3 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய  உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு  நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது.  இந்த ஊழல் வழக்கில் சிதம்பரத்தை சேர்க்கலாமா வேண்டாமா என்பது குறித்து 2 வாரங்களுக்குள் முடிவு செய்யுமாறு சி.பி. ஐ. கோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008 ம் ஆண்டு செல்போன் கம்பெனிகளுக்கு 2 ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதில் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய கணக்கு தணிக்கை குழு தனது அறிக்கையில் குற்றம்சாட்டியிருந்தது. இதை தொடர்ந்து அப்போதைய தொலை தொடர்பு துறை அமைச்சர் தி.மு.க. வை சேர்ந்த ஆ.ராசாவை சி.பி. ஐ. அதிகாரிகள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ம் தேதி  கைது செய்தனர்.

இதை தொடர்ந்து அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி. ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி மேலும் பல ஆவணங்களை கைப்பற்றினர்.  இந்த வழக்கில்  ஆ.ராசாவின் முன்னாள் உதவியாளர்கள்  சித்தார்த் பெகூரா,  சந்தோலியா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மேலும் கருணாநிதியின் மகளும் கலைஞர் டி.வி.யின் பங்குதாரருமான  கனிமொழியும் கைது செய்யப்பட்டார்.  இதே போல கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனரும்  இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.  2 ஜி ஊழல் வழக்கில்  கனிமொழி  கூட்டு சதிகாரர் என்று சி.பி. ஐ.தனது குற்றப்பத்திரிகையில் பதிவு செய்திருந்தது.  இந்த வழக்கில் ராசா உள்பட மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் கனிமொழி உள்ளிட்ட சுமார் 10 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆ.ராசா மற்றும் சிலர் மட்டும் இன்னும் டெல்லி திகார் சிறையிலேயே அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஆ.ராசா 2008 ம் ஆண்டு தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த போது மத்திய நிதி அமைச்சராக இருந்தவர்  இப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். 

இந்த 2 ஜி ஊழல் விவகாரத்தில் ப.சிதம்பரத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்றும்  சிதம்பரத்திற்கு தெரியாமல் இந்த  முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் எனவே  சிதம்பரத்தையும் இந்த வழக்கில் ஒரு குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்றும் கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணியம் சாமி ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது  சுப்ரீம் கோர்ட்டு  நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரணை நடத்தியது. 

வாத பிரதி வாதங்களை கேட்ட  நீதிபதிகள் நேற்று தங்களது தீர்ப்பை வெளியிட்டனர்.

2 ஜி ஊழல் வழக்கில் சிதம்பரத்திடம் விசாரணயினை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும் என்ற சுப்பிரமணியம் சாமியின்  கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். 

மேலும் இந்த வழக்கில் சிதம்பரத்தை சேர்க்கலாமா வேண்டாமா  என்பது குறித்த முடிவை 2 வாரங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும் என்று சி.பி. ஐ. சிறப்பு கோர்ட்டுக்கு  நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

எனவே 2 ஜி வழக்கில் சிதம்பரம் சேர்க்கப்படுவாரா என்பது குறித்து  ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி. ஐ.சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஓ.பி. சைனிதான் முடிவு செய்வார்.

நேற்றைய தங்களது தீர்ப்பு அல்லது உத்தரவு காரணமாக சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஏற்கனவே நடைபெற்று வரும் விசாரணைகள்  எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

சி.பி. ஐ. சிறப்பு கோர்ட்டிலும் சுப்பிரமணியம் சாமி  இதே போன்ற ஒரு மனுவை ஏற்கனவே தாக்கல் செய்துள்ளார்.

2 ஜி ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில்  சிதம்பரத்தையும்  குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று சாமி அந்த மனுவில் கூறியுள்ளார்.  இது தொடர்பான ஆவணங்களையும்  அவர்  சி.பி. ஐ.சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். 

ஆனால்  அந்த மனு மீது  விசாரணை நடத்திய நீதிபதி ஓ.பி.சைனி  இது தொடர்பான தனது  தீர்ப்பை பிப்ரவரி 4 ம் தேதிக்கு  ஏற்கனவே ஒத்திவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில்தான் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தனது பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஆ.ராசா தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த போது ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்திருக்கிறார்.  ஆகவே  2 ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் தொடர்பான விலை நிர்ணயத்தில்  அவருக்கும் பங்கு இருக்கிறது  என்றும் மேலும் 2 தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு இடையே நடந்த பங்கு பரிவர்த்தனை விஷயமும் கூட அவருக்கு தெரிந்திருக்க நியாயம் இருக்கிறது என்றும்  ஆகவே சிதம்பரத்தையும் இந்த ஊழல் வழக்கில் விசாரிக்க வேண்டும் என்றும் சாமி தனுது மனுவில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே சிதம்பரத்தின் தலை விதியை நிர்ணயிக்கப்போவது  சி.பி. ஐ. சிறப்பு கோர்ட்டுத்தான் . இந்த கோர்ட்டு தனது முடிவை இன்னும் 2 வாரத்திற்குள் அறிவிக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்