முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி அலைவரிசை ஏலத்தால் ரூ. 1 லட்சம் கோடி வருவாய் உரிமம் இழந்த நிறுவனங்கள்

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2012      ஊழல்
Image Unavailable

புது டெல்லி, பிப். - 4 - சுப்ரீம் கோர்ட் தீர்ப்புப்படி 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை மீண்டும் ஏலத்திற்கு விட்டால் மத்திய அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்றும், உரிமங்களை இழந்த நிறுவனங்களில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்படும் என்று தெரிகிறது.  செல்போன் சேவைக்கு பயன்படும் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்பட்ட 122 உரிமங்களை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின்படி அடுத்த 4 மாதங்களில் இதற்கு மறு ஏலம் நடத்தப்பட்டு ஒதுக்கீடுகள் வழங்கப்படும். 2010 ஏப்ரலில் ஏல முறையில் 3 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்தது. அந்த ஏலத்தில் அரசுக்கு 67 ஆயிரத்து 719 கோடி கிடைத்தது. அகன்ற அலைவரிசை ஒதுக்கீட்டில் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான வருவாய் அரசுக்கு கிட்டியது. ஆனால் 2008 2 ஜி அலைவரிசையை முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 8 நிறுவனங்களுக்கு ஒதுக்கியதில் அரசுக்கு வெறும் ஆயிரத்து 685 கோடிதான் கிடைத்தது.  இப்போது ஏல முறையில் தற்போதைய சந்தை மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்யும் போது 2010 ல் 3 ஜி ஒதுக்கீட்டில் கிடைத்த வருவாயை காட்டிலும் அதிகம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2012, 2013 ல் நிதி பற்றாக்குறையை குறைப்பதற்கு முயற்சி செய்து வரும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு இது உதவிகரமாக இருக்கும். ஆனால் எவ்வளவு கூடுதல் நிதி கிடைக்கும் என்பது துல்லியமாக தெரியவில்லை. இந்த புதிய ஏல முறையில் அரசுக்கு 57 ஆயிரத்து 626 கோடி முதல் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கும் என்று கணக்கு தணிக்கையாளர் தெரிவித்துள்ளார்.  தற்போது 122 உரிமங்கள் ரத்து செய்யப்படுவதால் பாரதி, ஏர்டெல், வோடபோன், பி.எஸ்.என்.எல். போன்ற பழைய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படாது. மாறாக, உரிமங்களை இழந்த நிறுவனங்களில் 7 கோடி சந்தாதாரர்கள் மேற்கண்ட பழைய நிறுவனங்களுக்கு மாறுவதற்கும் வாய்ப்புள்ளது. உரிமங்களை இழக்கும் யூனிநார் நிறுவனத்திற்கு அதிகபட்சமாக 3.63 கோடி சந்தாதாரர்களும், அதற்கடுத்தார்போல் சிஸ்டிமாசியாங் நிறுவனத்துக்கு ஒன்றரை கோடி வாடிக்கையாளர்களும், வீடியோகானுக்கு 54 லட்சம் வாடிக்கையாளர்களும், எடிசலாட்டுக்கு 16 லட்சம் வாடிக்கையாளர்களும் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் எண்களை மாற்றாமலேயே பழைய நிறுவனங்களுக்கு மாறலாம். உரிமங்களை இழக்கும் நிறுவனங்கள் மூடப்பட்டால் அதில் வேலை செய்யும் பணியாளர்களின் நிலைமை என்னவாகும் என்பது கவலையளிப்பதாக உள்ளது. உதாராணமாக யுனிநார் நிறுவனத்தில் 17 ஆயிரத்து 500 பேரும், சிஸ்டிமாசியாங் நிறுவனத்தில் 3 ஆயிரத்து 500 பேரும் பணியாற்றுவதாக கூறப்படுகிறது. ஆனாலும் நிறுவனங்களை இணைத்து வேலையிழப்பை தடுப்பதற்கான முயற்சியும் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்