முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ப.சிதம்பரம் பாராமுகம் மத்திய அரசு வெட்கப்பட்டுதான் ரூ.500 கோடியை ஒதுக்கியது

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

சென்னை, பிப்.- 4 - `தானே புயல்' நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.500 கோடியை எப்படி ஒதுக்கியது என்பதற்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று சட்டசபையில் விளக்கமளித்தார். தமிழக அரசின் செயலை கண்டு வெட்கப்பட்டுதானோ என்னவோ இந்தி சிறிய நிதியை மத்திய அரசு ஒதுக்கியது என்றும் அவர் கூறியுள்ளார். சட்டப் பேரவையில் நேற்று தானே புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசு சிறிய தொகையையே ஒதுக்கியதாக பலர் பேசினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆறுமுகம்  பேசும்போது, தமிழக அரசு ரூ.5 ஆயிரம் கோடி கேட்டதற்கு வெறும் 500 கோடியை மட்டும் மத்திய அரசு ஒதுக்கியது. இது யானை பசிகக்கு சோளப் பொரி போட்டது போல உள்ளது என்று கூறினார். அப்போது முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு பேசியதாவது:- `தானே' புயல் நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசிடம் ரூ.5,000 கோடி மாநில அரசு கேட்டு, வெறும் 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதை உறுப்பினர்  இங்கே குறிப்பிட்டு, அது யானைப் பசிக்கு சோளப் பொரி போடுவது போன்றதாகும் என்று குறிப்பிட்டார்.  இந்த ரூ.500 கோடியை கூட எப்படி கொடுத்தார்கள் என்பது உறுப்பினருக்கு தெரியுமா என்பது எனக்குத் தெரியவில்லை.  அதாவது இந்தப் புயல் அடித்த பின்னர், உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொண்டோம்.  முதல் நாள் தொடங்கி தொடர்ந்து மத்திய அரசை வற்புறுத்திக் கொண்டேயிருந்தோம்.  நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கித் தாருங்கள், நிதி உதவி செய்யுங்கள் என்று திரும்பத் திரும்ப கேட்டு, மத்திய அரசிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.  நிதி உதவியும் வரவில்லை.  சரி, இப்படியே நாம் காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தால், இது வேலைக்கு ஆகாது, எந்தப் பணியும் நடைபெறாது என்று மாநில அரசால் முடிந்த தொகை ரூ.850 கோடியை ஒதுக்கிவிட்டோம் (மேசையைத் தட்டும் ஒலி) நிவாரணப் பணிகளைத் தொடங்கிவிட்டோம்.  அதன் பின்னர் மாநில அரசிடம் போதிய நிதியில்லை என்பதற்காக பத்திரிகைகளில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டோம்.  மாநில அரசு சார்பாக நல்ல மனம் படைத்தவர்கள் அனைவரும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்குத் தாராளமாக உதவி செய்யவேண்டும். குறிப்பாக இந்த தானே புயல் நிவாரணப் பணிகளுக்காக பொதுமக்கள் வாரி வழங்க வேண்டுமென்று விளம்பரத்தை நாங்கள் வெளியிட்டோம்.  அன்றையதினம், காலையில் எல்லா நாளேடுகளிலும், தினசரிகளிலும் இந்த விளம்பரம் வந்தது.  அது  வந்தபிறகு, மத்திய அரசு வெட்கப்பட்டுவிட்டதோ என்னவோ தெரியவில்லை.  அன்று பிற்பகல்தான் இந்த 500 கோடி ரூபாய் தருவதாக அறிவித்தார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)  அப்போது காங்கிரஸ் உறுப்பினர் ரங்கராஜன், பொன் வைக்கும் இடத்தில் பூ வைத்தது போல இந்த தொகையை மத்திய அரசு முதல்கட்டமாக ஒதுக்கியுள்ளது. நாங்களும் தமிழக காங்கிரஸ் சார்பாக கூடுதல் நிதியை மத்திய அரசிடம் கேட்டு இருக்கிறோம் என்றார்.
அப்போது முதல்வர் ஜெயலலிதா மீண்டும் குறுக்கிட்டு, இங்கிருக்கும் காங்கிரஸ் உறுப்பினர்களை நான் குறை சொல்ல மாட்டேன். நீங்கள் தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அதனால் நிதி கிடைக்க உதவி செய்ய நினைக்கிறீர்கள். ஆனால் மத்திய அரசுதான் பாராமுகமாக உள்ளது. தமிழக மக்களின் ஓட்டுகளை பெற்று இங்கிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் போன்றவர்கள் தான் பாராமுகமாக உள்ளனர் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்