முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம் ஊழல் கருணாநிதியிடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 20 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி,மார்ச்.- 20 - முதல்வர் கருணாநிதி மனைவி தயாளு அம்மாள்,மகள் கனிமொழி ஆகியோர் மீது மோசடி மற்றும் ஏமாற்றுதல் ஆகிய சட்டப்பிரிவின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படபலாம் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கருணாநிதியிடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வருவதால் அந்த துறை வருமானம் அதிகமுள்ள துறையாக மாறி வருகிறது. இதை கருத்தில் கொண்டு முதல்வர் கருணாநிதி, மத்தியில் தொலைதொடர்புத்துறையை தமது தி.மு.க. கட்சியை சேர்ந்த ஆ.ராசாவுக்கு சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் போராடி வாங்கிக்கொடுத்ததாக கூறப்படுகிறது.  இதை பயன்படுத்திக்கொண்ட ராசா, தொலை தொடர்புத்துறையை தமது இஷ்டம்போல் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க தொடங்கினார். 

கடந்த 2008-ம் ஆண்டு இரண்டாம் தலைமுறைக்கான 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை அமைச்சர் ஆ.ராசா தனது இஷ்டம் போல் ஒதுக்கினார். மத்திய சட்ட அமைச்சகம், நிதி அமைச்சகம் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரைகளை தூக்கி எறிந்துவிட்டு, ஏலம் முறையை தவிர்த்து முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை என்று தனது வசதிக்கேற்ப விதிமுறைகளையே மாற்றி 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கீடு செய்துள்ளார். அதுவும் பெரிய கம்பெனிகளுக்கு ஒதுக்காமல் சிறு சிறு கம்பெனிகளுக்கே ஒதுக்கீடு செய்துள்ளார். நமது எதிரி நாடுகளான சீனா, பாகிஸ்தான் நாடுகளுடன் தொடர்புடைய தகவல் தொடர்பு கம்பெனிகளுக்கும் குறைந்தவிலையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்துள்ளார். சில பெயரளவில் உள்ள கம்பெனிகளுக்கும் ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த கம்பெனிகள் வேறு கம்பெனிகளுக்கு அதிக விலைக்கு அந்த ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கீட்டை மறுவிற்பனை செய்து கொள்ளை லாபம் அடித்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.  இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, இடதுசாரி கட்சி தலைவர்கள், ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் எழுப்பினர். மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராசாவை நீக்க வேண்டும் என்று ஜெயலலிதா பலமுறை பிரதமர் மன்மோகன் சிங்கை கேட்டுக்கொண்டார். இந்தநிலையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் மத்திய அரசுக்கு ரூ.ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய தணிக்கை கணக்கு ஆணையம் தெரிவித்தது. அதன் பிறகுதான் சுப்ரீம்கோர்ட்டு சுதாரித்து கொண்டு உலகிலேயே மிகப்பெரிய அளவில் நடந்துள்ள இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதனையொட்டி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்த சி.பி.ஐ. விசாரணை ஆமை வேகத்தில் நடைபெற்றது. இதற்கு சுப்ரீம்கோர்ட்டு கண்டனம் தெரிவித்ததோடு விசாரணையை கண்காணிக்கத்தொடங்கியது. இதனைத்தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணை தீவிரமடைந்தது. 2 ஸ்பெக்ட்ரம் ஊழலில் பிரபல அரசியல் தரகர் நீரா ராடியாவுக்கும் கருணாநிதி மகள் கனிமொழி, ராசா ஆகியோர்களுக்கிடையே தொடர்பு இருப்பது சி.பி.ஐ. விசாரணையில் தெரியவந்தது.  மேலும் இந்த பிரச்சினையை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பி, மத்திய அரசுக்கு இவ்வளவு பெரிய அளவில் இழப்பு ஏற்பட காரணமாக இருந்த ஆ.ராசாவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரினர். இதனால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நடத்த முடியவில்லை. அந்த கூட்ட தொடர் முழுவதும் முடங்கி போனது. எதிர்க்கட்சிகளின் வற்புறத்தலின் காரணமாக அமைச்சர் பதவியில் இருந்து ராசா ராஜினாமா செய்தார். இதனையொட்டி நீரா ராடியாவின் சென்னை, டெல்லி நிறுவனங்கள், ஆ.ராசாவின் வீடுகள், நிறுவனங்கள், ராசாவின்  பினாமியான சாதிக்பாட்ஷா, ராசாவின் தந்தை, மற்றும் நண்பர்கள் வீடுகளில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது. அதனையடுத்து சாதிக்பாட்ஷாவிடம் சி.பி.ஐ. விசாரண நடத்தியது. அப்போது ரூ. ஒரு லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட ரியல் ஸ்டேட்டில் தற்போது ரூ. 100 கோடிக்கும் மேல் முதலீடு இருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்தது. அதன் பின்னர் ஆ.ராசாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. ராசாவிடம் 14 நாட்கள் விசாரணை நடந்தது.  விசாரணையின்போது உண்மைகளை ஆ.ராசா மறைக்கிறார் என்றும் சி.பி.ஐ. குற்றஞ்சாட்டியது. குவைத் உள்பட பல வெளிநாடுகளில் உள்ள வங்கிகள் மற்றும் நிறுவனங்களில் ஆ.ராசா, தனது மனைவி கணக்குகளில் ரூ. 3 ஆயிரம் கோடிக்கு பரிமாற்றம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.   விசாரணையை தொடர்ந்து ராசா கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஸ்வான் நிறுவன புரமோட்டர்ஸ் பால்வா,தொலைதொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெகுரா,ராசாவின் தனி செயலாளர் சந்தோலியா ஆகியோர்களிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. விசாரணைக்கு பிறகு அவர்களும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சித்தார்த்தா பெகுரா, ஓய்வுக்கு பின்னர் டெல்லியில் உள்ள நீரா ராடியாவின் கம்பெனியில் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றினார். ராசாவின் பினாமியாக இருந்த சாதிக்பாட்ஷாவிடம் மீண்டும் சி.பி.ஐ. விசாரணை நடத்தவிருந்தது. அப்போது சாதிக்பாட்சா அப்ரூவராக மாறலாம் என்று கூறப்பட்டது. அதற்குள் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் சாவில் மர்மம் இருக்கிறது என்று ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார். அவரது சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரச உத்தரவிட்டுள்ளது.  கருணாநிதியின் மனைவி தயாளுஅம்மாள், அவரது மகள் கனிமொழி ஆகியோர்களிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தில் கனிமொழியும் தயாளு அம்மாளும் பங்குதாரர்களாக உள்ளனர். கலைஞர் டி.வி.க்கு டி.பி.ரியால்டி நிறுவனத்தில் இருந்து சினியுக் மூலமாக ரூ.214 கோடி வந்துள்ளது. இதுகுறித்து கலைஞர் டி.வி. பங்குதாரர்களாக இருக்கும் தயாளு அம்மாள் மற்றும் கனிமொழி ஆகியோர்களிடம் கடந்த 11-ம் தேதி சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. அண்ணா அறிவாலயத்தில் வைத்து இந்த விசாரணை நடைபெற்றது. அப்போது தி.மு.க. வுக்கும் காங்கிரசுக்கும் இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த சூழ்நிலையில் சி.பி.ஐ. எப்படி சுதந்திரமாக விசாரணை நடத்த முடியும் என்று எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பினர்.

இந்தநிலையில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகையை வரும் 31-ம் தேதிக்குள் சி.பி.ஐ. தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு காலக்கெடு விதித்துள்ளது. அதனையொட்டி குற்றப்த்திரிக்கை தயாரிக்கும் பணியில்  பணியில் சி.பி.ஐ. இறங்கியுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் தி.மு.க.தலைவரும் முதல்வருமான கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி ஆகியோரும் சேர்க்கப்படலாம் என்று சிஎன்என்-ஐபிஎன்னுக்கு சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  குற்றப்பத்திரிகையில் தயாளு அம்மாள், கனிமொழி ஆகியோர் சட்டப்பிரிவு 120பி(மோசடி மற்றும் ஏமாற்றுதல்) ஆகியவற்றின் கீழ் சேர்க்கப்படலாம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆர்.டி.ரியால்டி குரூப்பில் இருந்து ரூ. 200 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும் யுனிடெக் நிறுவனத்திற்கு டாடா ரியாலிட்டி நிறுவனமானது ரூ.ஆயிரத்து 700 கோடிக்கு கடன் கொடுத்திருப்பது தொடர்பாகவும் சி.பி.ஐ. தீவரமாக விசாரணை நடத்தி வருகிறது. டாடா நிறுவனங்களின் துணை நிறுவனமான ஓல்டாஸ் நிறுவனமானது கனிமொழியின் உதவியாளருக்கு சென்னையில் நிலமாற்றம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலபரிமாற்றமானது ஆ.ராசாவிடம் இருந்து இரட்டை தொழில்நுட்ப லைசன்ஸ் பெற்றதற்காக இருக்கலாம் என்றும் தெரிகிறது. 

இதற்கிடையில் முதல்வர் கருணாநிதியிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்தலாம் என்று தெரிகிறது. ஆனால் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கருணாநிதி குற்றம்சாட்டப்பட்டவர் அல்ல. அல்லது சந்தேகப்படும்படியான நபரும் அல்ல. இருந்தபோதிலும் கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக ஒரு சாட்சி என்ற முறையில் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்வோம். அதற்காக 15 முதல் 20 கேள்விகள் வரையுள்ள ஒரு கேள்வித்தாளை தயாரித்து வைத்திருக்கிறோம் என்று  ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை விசாரித்து வரும் ஒரு மூத்த சி.பி.ஐ. அதிகாரி கூறினார். ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் ஒதுக்கீட்டிற்காக தொலைதொடர்புத்துறை கொள்கையையே ஆ.ராசா மாற்றம் செய்தது உங்களுக்கு தெரியுமா என்ற கேள்வி கருணாநிதியிடம் முதலில் கேட்கப்படும் என்றும் சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முதல்வர் கருணாநிதியிடம் வருகின்ற 29-ம் தேதிக்குள் விசாரணை நடத்தப்படலாம் என்று தெரிகிறது. அதனால் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகை வருகின்ற 31-ம் தேதிதான் தாக்கலாகும் என்று தெரிகிறது. இந்த குற்றப்பத்திரிகையில் மேலும் யார் யார் சேர்க்கப்படுகிறார்களோ தெரியவில்லை. தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன்,தொலைதொடர்புதுறை விதிமுறைகளில் சில மாற்றத்தை செய்தார். அந்த மாற்றத்தை அதற்கு பின்னர் அமைச்சராக வந்த ராசா,தனக்கு சாதகமாக்கிக்கொண்டார். மேலும் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்றும் விதிமுறைகளை மாற்றிக்கொண்டார். இதை ஆ.ராசா மறைத்துவிட்டாரா? அல்லது உங்களுக்கு தெரியுமா என்று கருணாநிதியிடம் கேட்கப்படும்.  அடுத்ததாக சில தகவல் தொடர்பு கம்பெனிகளுடன் ஆ.ராசாவுக்கு இருந்த தொடர்பு குறித்து தெரியுமா என்று கேட்கப்படும் என்றும் அந்த அதிகாரி கூறினார். மேலும் கடந்த புதன்கிழமை நடந்த விசாரணையின்போது ராசா தொடர்பு வைத்திருந்த அந்த 2 கம்பெனிகளின் பெயர்களை குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படும் என்று சி.பி.ஐ. சார்பாக தெரிவிக்கப்பட்டது. எங்களுடைய விசாரணையை சுப்ரீம்கோர்ட்டு தொடர்ந்து கண்காணித்து வருவதால் நாங்கள் அனைத்து விஷயங்கள் குறித்தும் முழுமையாக விசாரிப்போம். தி.மு.க.வின் தலைவராக கருணாநிதி இருப்பதால் ராசாவின் நடவடிக்கைகள் குறித்து கருணாநிதிக்கு தெரியுமா அல்லது தெரியாதா என்பதற்கு விளக்கம் எங்களுக்கு தேவையாக இருக்கிறது என்றும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்