முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைகளைக் காட்டி ஓட்டு சேகரிப்பதா? உமாபாரதி தாக்கு

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, பிப்.12 - உத்தரபிரதேசத்தில் ஓட்டுக்களை பெறுவதற்காக பிரியங்காகாந்தி தன் குழந்தைகளையும் பிரச்சாரக் கூட்டத்திற்கு உடன் அழைத்துவருவதை பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான உமாபாரதி கடுமையாக சாடியுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் அம்மாநிலத்தின் இதர பகுதிகளில் அனல்பறக்கும் ஓட்டு சேகரிப்பு நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் அங்கு முகாமிட்டு ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் உள்ள ரேபரேலி எம்.பி. தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பாக பேரணி ஒன்று நடத்தப்பட்டது. இந்த பேரணிக்கு சோனியா காந்தியின் மகள்  பிரியங்கா காந்தி தனது குழந்தைகளான ரேயான், மிராயா ஆகியோரை அழைத்து வந்திருந்தார். இவர் தனது குழந்தைகளையும் அரசியல் மேடையில் களமிறக்கியது பலரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. இதுவரை பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத பிரியங்காவின் குழந்தைகள் இந்த நிகழ்ச்சியில் முதன் முதலாக கலந்துகொண்டார்கள். 

இவ்வாறு பிரியங்கா தேர்தல் பிரச்சார கூட்டங்களில் தன்னுடைய குழந்தைகளையும் ஈடுபடுத்துவதை பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான உமாபாரதி கடுமையாக தாக்கி பேசியுள்ளார். தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய உமாபாரதி, இதற்கு முன் தனது குழந்தைகளை படம் பிடித்த பத்திரிகையாளர்கள் மீது வழக்கு தொடர்ந்த பிரியங்கா, ஆனால் இப்போது ஓட்டு வாங்குவதற்காக உத்தரபிரதேசத்திற்கு குழந்தைகளையும் அழைத்து வந்துள்ளார். ஓட்டுக்காகவே இப்போது குழந்தைகளையும் அவர் களமிறக்கியுள்ளார் என்றார். அவர் மேலும் கூறுகையில் சோனியா குடும்பத்தில் ராகுல், பிரியங்கா இருவர் இடையேயும் கருத்து வேறுபாடு நிலவுகிறது. பிரியங்காவின் கணவர் வதேரா அரசியலுக்கு வருவேன் என்கிறார். ஆனால் பிரியங்காவோ தனது கணவர் அரசியலுக்கு வரமாட்டார் என்று கூறுகிறார். இதில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவுகிறது. 

ராகுல்காந்தி உத்தரபிரதேசத்தில் தலித்துகள் வீடுகளில் தங்கி சாடுவது குறித்து சாடிய உமாபாரதி, தலித்துகள் வீட்டில் ராகுல்காந்தி சாப்பிடலாம்.  ஆனால் ராகுல்காந்தியின் வீட்டில் தலித்துகள் நுழைய முடியுமா? அங்கு சோபாவில் சொகுசாக உட்கார்ந்து தலித்துகள் சாப்பிட முடியுமா?  இதற்கெல்லாம் ராகுல்காந்தி பதில் தருவாரா என்றும் உமாபாரதி கேள்விக்கணைகளை தொடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்