முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலையைணை வைத்து உறங்குவது நல்லதா இல்லை கெட்டதா?

புதன்கிழமை, 1 ஜூன் 2022      பிரத்யேகமான      அறிவியல்
photo

தலையணை இல்லாமல் உறங்குவது சிலருக்கு மிகவும் கடினமான காரியம். சிலர் தலையணையை தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ஒன்று என பல தலையணை பயன்படுத்தி உறங்குவார்கள். சிலருக்கு தலைக்கே இரண்டு தலையணை வைத்து படுத்தால் தான் உறக்கம் வரும்.

ஒரு சிலர் படுக்கையறையில் தலையணை குவிந்திருக்கும். சிலர் 4-5 தலையணைகளை தலைக்கு வைத்து உட்கார்ந்து தூங்குவது போல் தூங்குவார்கள். இப்படி தூங்குகிற அனைவருக்கும் முதுகுவலி பிரச்சனை இருக்கும். காலையில் இவர்கள் எழும் பொழுது முதுகுவலி வலியுடன்தான் எழுவார்கள்.

 இப்படி நாம் தலையணை வைத்து படுத்து உறங்குவதால் மேலும் உடலில் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தலையணை வைத்து உறங்குவது என்பது உங்களுக்கு சுகமானதாக தெரியலாம் ஆனால் அது உங்கள் உடலுக்கு ஆரோக்கிய சீர்கெட்டை தரும்.

 தலையணை என்பது ஆதிகால மனிதர்களிடம் இல்லை. சாயும்போதும், உட்காரும்போதும் ஏதேனும் ஒன்றை ஒத்தாசையாக வைத்து, அதில் ஒருவித சுகத்தைக் கண்டு, அப்படியே தடிமனான பொருட்களைத் தலைக்கு வைத்துத் தூங்குவது வழக்கமாகியிருக்கிறது. 

ஆரம்பத்தில் ராஜாக்கள், பணக்காரர்கள் என்று சிலர் மட்டுமே உபயோகபடுத்தி உள்ளனர் . ஆனால், கடந்த 50, 60 ஆண்டுகளில் தான் ஏழை, பணக்காரர் என்று அனைவரும் தலையணைக்கு அடிமையாகி விட்டனர். இன்று அது வளர்ந்து தலையணைகள் ஒவ்வொரு வீட்டிலும் இடம் பிடித்துள்ளது. 

படுக்கும்போது எக்காரணம் கொண்டும் குப்புறப்படுத்து உறங்கக்கூடாது. வானத்தைப் பார்த்து சமமான தரையில் உறங்க வேண்டும்.நடக்கும்போது நாம் எப்படி நேராக நடக்கிறோமோ, அப்படித்தான் படுக்கும்போதும் சமமான தரையில் நேராகப் படுத்து உறங்க வேண்டும். 

உயரமான தலையணையைப் பயன்படுத்தினால், கழுத்துப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்படும். இதனால் கழுத்தைத் திருப்பும்போது வலி ஏற்படும். கழுத்தைத் திருப்ப முடியாத அளவுக்கும் சிரமம் உண்டாகலாம்.

 இதயத்திலிருந்து மூளைக்கு ரத்தம் செல்லும் முக்கியமான ரத்தக் குழாய் கழுத்துப் பகுதியில் உள்ளது. கைக்கு ரத்தம் செல்லும் ரத்தக் குழாயும் உள்ளது. இந்த இரண்டும் அழுத்தப்பட்டால் மூளைக்கு ரத்தம் செல்வது தடைபட்டு உறக்கம் தொலையலாம்; கைக்கு ரத்தம் குறைந்து, உறக்கம் கெடலாம். 

உடற்பருமன் உள்ளவர்கள் உயரமான தலையணையைப் பயன்படுத்தினால், தொண்டைத் தசைகளில் அழுத்தம் ஏற்பட்டு குறட்டை வரலாம். சுவாசம் தடைபடலாம். இதனால் உறக்கம் கெடலாம். 

குறை ரத்தஅழுத்தம் உள்ளவர்கள், கழுத்து எலும்புகளில் தேய்மானம் உள்ளவர்கள், கழுத்து எலும்புகளில் சவ்வு விலகியவர்கள், ‘வெர்டிகோ’ எனும் தலைச்சுற்றல் பாதிப்பு உள்ளவர்கள் ஆகியோர் தலையணையைத் தவிர்த்து, சமநிலையில் படுப்பதே நல்லது. 

பஞ்சு மெத்தையில் படுப்பது, பஞ்சு நிரப்பிய தலையணையைப் பயன்படுத்துவது போன்றவற்றால் கழுத்துப் பகுதியில் உள்ள எலும்புகள் தேய்மானம் அடையும்.பின் அங்கே உள்ள நரம்புகள் பாதிக்கப்படும். அதனால், மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டு மூளை பாதிப்பு தொடங்கி பலவிதமான பிரச்னைகள் வரக்கூடும். 

தலையணை பயன்படுத்தாமல் படுத்து உறங்குவதால் தண்டுவடம் அதன் இயற்கை நிலையில் இலகுவாக இருக்கும். இதனால் தண்டுவட பிரச்சனை, உடல் வலி போன்றவை ஏற்படாது. கெட்டியான / கடுமையான தலையணை பயன்படுத்துவதால் தண்டுவடத்தில் கெடுதல்கள் உண்டாகலாம். 

தலையணை இல்லாமல் உறங்குவதால் தோள்பட்டை மற்றும் கழுத்து வலி உண்டாகாமல் தடுக்க முடியும். வலியை குறைக்க முடியும். தலையணை இல்லாமல் படுத்து உறங்குவதால் உடலின் எலும்பு நிலைகளை சீராக்க முடியும்.எக்காரணம் கொண்டும் பிறந்த குழந்தைகள் தொடங்கி, வளரும் குழந்தைகள் என யாருக்கும் தலையணை வைத்து பழக்கப்படுத்த வேண்டாம். அதனால், இளம் பிஞ்சுகளின் ரத்த ஓட்டம் தடைபட்டு மூளை பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

குழந்தைகள் பிறந்தது முதல் ஒரு வயது வரையில் அதிகமாக தூங்குவார்கள். அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது.குழந்தைக்கு இரண்டு வயதாகும் வரை தலையனை போட வேண்டிய அவசியமில்லை. அதற்கு மேல் உயரமான தலையணை போட வேண்டாம். தலையணை வைத்தால் குழந்தை நன்றாக தூங்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

 ஆனால் அதுவே குழந்தைக்கு மூச்சுத்திணறலை உண்டாக்கும் என்று தெரியுமா? தலையணை வைப்பதால் குழந்தைக்கு இருக்கும் மெல்லிய நாஸ்ட்ரில்கள் அழுத்தம் பெற்று மூச்சுக்காற்று சென்று வெளிவருவதில் சிரமத்தை ஏற்படுத்தும். இதனால் குழந்தை திரும்பி படுக்கும் போது மூச்சுத்திணறலை உண்டாகும். இதனால் ஏற்படக்கூடிய அதிக வியர்வை குழந்தைக்கு பாதிப்பை உண்டாக்கும். சில நேரங்களில் தலையில் அதிக சூடு, உடலில் குளிர் என வேறுபட்ட வெப்பநிலை இருப்பதாலும் பாதிப்பு உண்டாகும்.

 குழந்தைகளுக்கு மென்மையான தலையணை தேவையில்லை மாறாக தலையணை உயரமில்லாமல் தட்டையாக இருந்தாலே போதும். நீண்ட நேரம் தூங்கும் குழந்தை உயரமான தலையனையால் குழந்தையின் கழுத்து எலும்பு பாதிக்கப்படும். இதனை தவிர்க்க தலையணை போடாமல் இருப்பதே நல்லது. இரண்டு வயது வரை தலையணை வைப்பதை தவிர்க்கவும்.

 ஆனால், சிலருக்கு மருத்துவ நிலை காரணமாக தலையணை பயன்படுத்துவதாக கட்டாயமாக இருக்கும், அவர்கள் தலையணை பயன்படுத்த வேண்டியது அவசியம். அதுபோல கண்டிப்பாக தலையணை வைத்து படுக்கவேண்டும் என்பவர்கள் ஒருசில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.நேராக படுத்து உறங்கும் பழக்கம் உடையவர்களுக்கு மெல்லிய தலையணை சிறந்தது. இது கழுத்து, தலை, தோள்ப்பட்டை பிரச்சனைகள் உண்டாகாமல் காக்கும். 

ஒருபக்கமாக படுத்து உறங்கும் நபர்களுக்கு அடர்த்தியான தலையணை சிறந்தது. இது தோள்பட்டை மற்றும் காதுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தி கொடுக்கும். குப்புறப்படுத்து உறங்கும் நபர்களுக்கு தட்டையான தலையணைகள் சிறந்தது. இது தலையின் நிலை அசௌகரியமாக உணராமல் இருக்க உதவும். மேலும், முதுகு, இடுப்பு வலி ஏற்படாமல் பாதுகாக்கும். 

நீங்கள் சுகமாக உறங்க வேண்டுமா, உங்களுக்கு குறைந்தது இரண்டு தலையணைகள் தேவை. ஒன்று உங்கள் தலைக்கு ஒன்று உங்கள் கால்களுக்கு இடையே வைத்துக்கொள்ள உதவும். உங்கள் கால்களுக்கு இடையில் ஒரு தலையணையை வைப்பது ஆறுதல் தரும், மற்றும் முழங்கால்களை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்திருப்பதன் மூலம் அழுத்தத்தை நீக்குகிறது.முழங்கால்களுக்கு இடையில் ஒரு உறுதியான தலையணையை வைத்து தூங்குங்கள். முக்கியமாக இந்த தலையனை உங்கள் முழங்கால்களில் இருந்து கணுக்கால் வரை இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதனால் முழங்கால்கள் மற்றும் கணுக்கால் சரியாக ஒரே நிலையில் இருக்கும், என்பதால் சீராக தூக்கம் வரும். 

உங்கள் கால்களுக்கு இடையில் ஒரு தலையணையை வைத்து தூங்குவது உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை எளிதாக்க உதவுகிறது. இது உங்கள் இரத்த ஓட்டத்தை எளிதாக்குகிறது, இது உங்கள் உறுப்புகள் சரியாக செயல்பட உதவுகிறது மற்றும் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

கால்களுக்கு இடையே தலையணை வைத்து தூங்கும் போது, அது இடுப்பில் உள்ள அழுத்தத்தைக் குறைக்கிறது. அதோடு முதுகெலும்புகள் சீரமைப்பில் இருந்து நகர்வதையும் தடுக்கிறது. இதனால் உங்கள் முதுகு வலி குறையும். 

தலையணை ஆரோக்கியமான தூக்கத்தையும் ஊக்குவிக்கும், மேலும் உடல் வலியைப் போக்கவும் உதவும். மேலும் உங்கள் முதுகெலும்பை சீராக வைத்திருப்பது மட்டுமின்றி, காலையில் சரியாக எழுந்திருப்பதையும் உறுதி செய்கிறது.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்