முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாஹலின் மோசமான சாதனை

வெள்ளிக்கிழமை, 3 மே 2024      விளையாட்டு
3-Ram-58-3

Source: provided

ஐபிஎல் தொடரின் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி முதலில் தடுமாறினாலும் பின்னர் அதிரடி காட்டி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது.

ராஜஸ்தான் தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 4 ஓவர்கள் வீசி 62 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் தனது மோசமான சாதனையை சாஹல் படைத்துள்ளார். இதற்கு முன்னர் கொல்கத்தா அணிக்கு எதிராக 1 விக்கெட் வீழ்த்தி 54 ரன்கள் விட்டுக் கொடுத்ததே மோசமான சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தாயகம் திரும்பிய பதிரனா, தீக்ஷனா  

நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி தலா 5 வெற்றிகள் மற்றும் 5 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. எஞ்சிய 4 போட்டிகளில் குறைந்தது 3-ல் வெற்றி பெற்றால் அந்த அணி எந்த வித சிக்கலுமின்றி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்று விடும். இந்த சூழலில் சென்னை அணியில் இடம் பிடித்திருந்த இலங்கையை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பதிரனா மற்றும் சுழற்பந்து வீச்சாளர் தீக்ஷனா ஆகியோர் தற்போது நாடு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் அவர்கள் இலங்கைக்கு சென்ற காரணமும் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இலங்கை அணியில் அவர்கள் விளையாட இருப்பதினால் பாஸ்போர்ட் மற்றும் விசா தொடர்பான பணிகளுக்காகவே அவர்கள் அங்கு சென்று இருக்கிறார்கள். அந்த செயல்முறைகள் முடிந்த பிறகு அவர்கள் மீண்டும் சென்னை அணியுடன் இணைவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அணி குறித்து சங்கக்காரா

20 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை டி-20 தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.  இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ரோகித் சர்மா நீடிக்கும் நிலையில், துணை கேப்டன் பொறுப்பு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் இந்திய அணியில் ஆல் ரவுண்டர்களும் தரமான ஸ்பின்னர்களும் போதுமான அளவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை முன்னாள் வீரர் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார். எனவே சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் எதிரணியை சாய்ப்பதற்கான கலவை இந்தியாவிடம் இருப்பதாக அவர் கூறியுள்ளார். அத்துடன் வெஸ்ட் இண்டீசில் சூழ்நிலை எப்படி இருக்கும் என்பது ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட்டுக்கு தெரியும் என்றும் சங்கக்காரா கூறியுள்ளார். அதற்கு தகுந்தாற்போல் அணியும் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்வதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

மூத்த ரசிகருக்கு ஜெர்சி பரிசு

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கத்தில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி ஆடினார். அப்போது அவரது ஆட்டத்தின் போது ரசிகர்கள் உற்சாக மிகுதியில் ஆரவார கோஷமிட்டனர்.ஆனாலும் பஞ்சாப் அணி இந்த போட்டியில் எளிதாக வென்றது.

இந்நிலையில் சென்னையை சேர்ந்த 103 வயது ராம்தாஸ் என்பவர் டோனியின் தீவிர கிரிக்கெட் ரசிகர். இவர் டோனி பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியை தவறாமால் பார்த்து ரசிப்பார். தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் டோனி ஆட்டத்தை பார்த்து ரசித்துள்ளார். இது பற்றி கேள்விபட்ட டோனி 103 வயதான அந்த ரசிகரைநேரில் சந்தித்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வாழ்த்து தெரிவித்து உள்ளார். மேலும் அந்த ரசிகருக்கு தனது கையொப்பமிட்ட சிறப்பு பரிசாக ஜெர்சி சட்டை ஒன்று வழங்கி வாழ்த்து தெரிவித்தார். எம்.எஸ்.டோனி 103 வயது ரசிகருக்கு சிறப்பு பரிசு வழங்கிய வீடியோ தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக ரசிகர்கள் டோனியை பாராட்டி வருகிறார்கள்.

ஆர்.சி.பி. அணியுடன் கொண்டாட்டம்

பாலிவுட் நடிகைகளில் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மா 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ரப் நே பனா தி ஜோடி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான விராட் கோலியும் காதலித்து வந்தனர்.இவர்கள் இருவருக்கும் 2017- ம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. 2021 ஜனவரி மாதம் வாமிகா என்ற பெண் குழந்தை பிறந்தது. இவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு அகாய் என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த நிலையில் அனுஷ்கா ஷர்மா, விராட்கோலி விளையாடும் முக்கிய போட்டிகளில் எல்லாம் களத்திற்கு வந்து அவரை உற்சாகப்படுத்த என்றுமே தவறியதில்லை. சமீபத்தில் நடைபெற்ற உலககோப்பை தொடரில் விராட்கோலி தனது 50-வது சதத்தை பூர்த்தி செய்தபோது அனுஷ்கா சர்மா, முத்தங்களை பறக்கவிட்டு உற்சாகத்தை கொடுத்தார். தற்போதும் ஐபிஎல் தொடரில் RCB அணியில் விளையாடும் விராட் கோலியை அவ்வபோது சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார்.  இந்த நிலையில் அனுஷ்கா ஷர்மா கடந்த மே- 1ந்தேதி அன்று தனது 36-வது பிறந்த நாளை வீராட் கோலியின் RCB நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடினார். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடரை வென்றது இந்தியா

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இரு போட்டிகள் முடிந்த நிலையில் இரு ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வங்காளதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இதையடுத்து 118 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 121 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஷபாலி வர்மா 51 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-0 என இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டி20 போட்டி வரும் 6ம் தேதி நடைபெறுகிறது. 

நடராஜனுக்கு கம்மின்ஸ் புகழாரம்

50வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் திரில் வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றிக்கு ஐதராபாத் அணியின் நட்சத்திர பவுலர் புவனேஷ்வர் குமார் முக்கிய காரணமாக அமைந்தாலும், மிடில் ஓவர்களில் நடராஜனின் கட்டுக்கோப்பான பவுலிங்கும் முக்கிய காரணமாக அமைந்தது. சிறப்பாக பவுலிங் செய்த நடராஜன் 4 ஓவர்களில் 35 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் பர்பிள் கேப்பையும் நடராஜன் வென்றார்.

இந்நிலையில் இந்த ஆட்டம் முடிந்த பின்னர் ஐதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது, நிச்சயம் இந்த போட்டி அற்புதமான ஒன்றாக அமைந்தது. இதுதான் டி20 கிரிக்கெட். என்ன வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும். புவனேஷ்வர் குமார் சிறப்பாக கடைசி பந்தை வீசினார். நாங்கள் மிடில் ஓவர்களில் சில விக்கெட்டுகளை எடுக்க முயற்சித்தோம். எங்கள் அணியின் நடராஜன் மிகச்சிறந்த யார்க்கர் பவுலராக இருக்கிறார். ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களின் தவறு காரணமாக எங்களுக்கு முக்கியமான விக்கெட்டுகள் கிடைத்தது. இந்த மைதானத்தில் சில போட்டிகளை விளையாடியுள்ளதால், 202 என்ற இலக்கை எளிதாக சேஸ் செய்ய முடியும் என்று நினைத்தேன். எங்கள் பேட்டிங்கில் நிதிஷ் ரெட்டி சிறப்பாக விளையாடினார். பீல்டிங் மற்றும் பவுலிங்கிலும் அவரால் பங்களிக்க முடிவது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து