சென்னை - புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், இது நட்பு ரீதியான சந்திப்பு என்றார். கடந்த சில வாரங்களாக வைகோ சிறையில் இருந்து வருகிறார். அவரை ஜாமீனில் வரச்சொல்லி கேட்டிருக்கிறோம். ஆனால் அவர் எங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டாரா என்பது தெரியவில்லை.
நட்பு ரீதியான சந்திப்புதான். நாங்கள் யாரும் அரசியல் பேசவில்லை என்றும் திருமாவளவன் தெரிவித்தார். கடந்த சட்டசபை பொதுத்தேர்தலின்போது மக்கள் நலக்கூட்டணியில் வைகோ, திருமாவளவன், முத்தரசன், ஜி. ராமகிருஷ்ணன், இணைந்திருந்தனர். சட்டசபைத் தேர்தலில் இந்த கூட்டணி படு தோல்வியை சந்தித்தது.இதனையடுத்து மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த வைகோ விலகினார். இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோவை திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் சந்தித்துள்ளனர்.