முக்கிய செய்திகள்

விலைக்கு வாங்க நிம்மதி என்பது கடைச் சரக்கா?

திங்கட்கிழமை, 22 மே 2017      வாழ்வியல் பூமி
yoga shadow

Source: provided

மதுரை வானொலியின் சான்றோர் சிந்தனை நிகழச்சியில் ஆன்மீக சொற்பொழிவாளர் திருவல்லிப்புத்தூர் டாக்டர் கே.பி.முத்துசாமி ஆற்றிய உரையை பார்ப்போம்!

அன்றாடம் நாம் சந்திக்கும் பெரும்பாலானவர்கள் மனதில் நிம்மதி இல்லை அதனால் இரவில் சரியாகத் தூங்கவும் முடியவில்லை. இறைவன் எனக்கு எல்லா வசதிகளைத் தந்தும் நிம்மதியைத் தரவில்லையே என்று புலம்புவதைக் கேட்கிறோம். நிம்மதி என்பது கடைச் சரக்கா? விலை கொடுத்து வாங்குவதற்கு. தினமும் கூலி வேலை செய்து அன்றாடம் ரூ. 200 சம்பாதிக்கும் ஒருவன் நான் நிம்மதியாக வாழ்கிறேன். அன்றாடம் என் கடமையைத் தவறாமல் செய்கிறேன். தர்மம் செய்கிறேன். சேமித்தும் வைக்கிறேன். அதனால் நான் நிம்மதியாக வாழ்கிறேன் என்றான். என் தாய், தந்தைக்கு உணவு கொடுத்து என் கடமையை ஒழுங்காகச் செய்கிறேன். என்வீட்டில் விதவையான தங்கையையும் அவளது பிள்ளையையும் பராமரித்து என்னால் இயன்ற தர்மத்தை செய்கிறேன். என்னுடைய இரண்டு பிள்ளைகளை வளர்த்து எனது எதிர்காலத்திற்கான சேமிப்பையும் செய்து நானும் என் மனைவியும் நிம்மதியாக வாழ்கிறேன் என்றான்.

நிம்மதியைத் தேடிச் சென்றவரிடம் ஒரு மகான் கூறினார். மனிதா உன் மனதிற்கு சில ரகசியங்கள் தெரியக்கூடாது. தெரிஞ்சா உன் நிம்மதி போய்விடும் என்றார். மனம் தேவையில்லாத சமயங்களில் தேவை இல்லாத சுமைகளைச் சுமப்பதும் இன்னொரு காரணம். ரயிலில் ஓடி வந்து ஏறியவன் தலையில் ஒரு மூட்டையை வைத்திருந்தான். ரயில் புறப்பட்டது. ஆனாலும் தன் மூட்டையை தலையில் இருந்து இறக்கவில்லை. காரணம் கேட்டபோது வேணாங்க, இந்த ரயில் என்னை மட்டும் சுமந்தா போதும், என்சுமையை நானே சுமந்துக்குவேன் என்றானாம். இது என்ன பைத்தியக்காரத்தனம். வாழ்க்கை என்பது ஒரு ரயில் பயணம் மாதிரிதான் பயணம் பூராவும் சுமந்து கொண்டே போகிறவர்கள் நிம்மதியாக வாழ முடியாது. தேவைப்படுகிறதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளணும். தேவை இல்லாதவற்றை மனதில் சுமையாக ஏற்றக்கூடாது.

எப்போதும் நிம்மதியாக வாழ்வதற்கு நம் முன்னோர்கள் சில வழிமுறைகளைச் சொன்னார்கள். உஷத்காலம் எனப்படும் அதிகாலை நேரத்தில் எழுந்து, இரு உள்ளங்கைகளையும் பார்த்து, பொறுமையின் சிகரமான பூமாதேவியை வணங்கி, நேற்று எனக்கு நல்ல தூக்கம் தந்து உதவினாய் இன்று காலையில் உன்னருளால் விழித்து எழுந்தேன். இன்றைய நாளில் நான் நல்லதையே நினைக்கவும், நல்லதையே செய்யவும், பிறருக்கு என்னால் இயன்ற உதவிகளைச் செய்து மகிழவும் என்னுடன் இருந்து வழி நடத்துவாயாக என்று இறைவனிடம் கையேந்துங்கள். அவன் இல்லை என்று மறுக்காமல் வேண்டியதை அருளுவான். நன்றாகத் தெளிவாகப் பேசுங்கள்.

பேசியபடி நடந்து காட்டுங்கள். வார்த்தை ஒன்று, வாழ்க்கை வேறு என இருக்காதீர்கள். கிடைக்கும் வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் முடிந்துபோன விஷயங்களைப் பற்றி எண்ணி வருந்தாதீர்கள். உங்களுக்குப் பிடித்தமான விஷயங்களைச் செய்ய அதற்கான நேரத்தை ஒதுக்குங்கள் சிறு குழுந்தைகளைப் போல வாழ்க்கையை நேசித்து அனுபவித்து வாழுங்கள். நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்! நரகத்தில் இடர்ப்போம் நடலையல்லோம்! ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்! என்று அப்பர் சுவாமிகள் அருளியதைப் போன்று வாழ்ந்தால் இன்பமே எந்நாளும் துன்பமில்லை. இனிது இனிது ஏகாந்தம் இனிது என்று நம்முன்னோர்கள் அருளியபடி தனிமையாக இருந்து இறைவனை தியானித்து மனத்தைக் கட்டுப்படுத்துங்கள்.

தினமும் ஒருவேளை உண்பவன் யோகி, இருவேளை உண்பவன் போகி, அதற்கு மேல் உண்பவன் ரோகி என்றார்கள் ஞானிகள். வயிறு நிரம்ப சாப்பிடாதீர்கள் வயிற்றில் கால்பாகம் காலியாக இருக்கட்டும். கண்ட நேரத்தில் தூங்காதீர்கள். குறிப்பிட்ட நேரத்தில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

மனதில் உறுதியையும், அமைதியையும் நிரப்புங்கள் எதிர்பாராது நடக்கும் நிகழ்வுகளை கண்டு பதட்டப்படாதீர்கள். மனதை அமைதியான நிலையில் வைத்து அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்து கொள்ளுங்கள். இரண்டாம் உலகப்போரில் எதிரிகளால் சுற்று வளைக்கப்பட்ட விஷயத்தை ஜெர்மன் படைத்தளபதி சொன்னதும், சிறிதும் பதட்டமின்றி சிரித்துக் கொண்டே மிகவும் நல்லது இனி நாம் எல்லாத் திசைகளிலும் தாக்குதல் நடத்தலாம் என்றாராம் ஹிட்லர்.

இது நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய நிகழ்வு. எனவே எங்கே நிம்மதி! எங்கே நிம்மதி! என்று தேடியலையாமல் அந்த நிம்மதி நம் மனத்தினுள்ளே தான் உள்ளது என்பதை உணர்ந்து வாழ்வோம் மன அமைதி அடைவோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: