அடுத்த மாதம் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் 2 நாள் தங்கியிருந்து பேச்சு நடத்துகிறார்கள். இரு தலைவர் களும் தங்கும் நட்சத்திர ஓட்டல் மற்றும் பார்வையிடும் இடங்கள் நவீன மயமாக்கப்படுகிறது. இந்த இடங்களை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27, 28 தேதிகளில் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது சீன அதிபர் ஷி ஜின்பிங்கை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அவரும் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார். அதன்படி ஷி ஜின்பிங், வரும் அக்டோபர் 11 முதல் 13-ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை, தலைநகர் டெல்லிக்கு வெளியே உள்ள நகரத்தில் சந்தித்துப் பேச பிரதமர் மோடி விரும்புகிறார். இதற்கான இடமாக மாமல்லபுரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் பேச்சுவார்த்தை, அடுத்த மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மாமல்லபுரத்தில் நடைபெறும். 11-ஆம் தேதி இரவில் அவர்கள் மாமல்லபுரம் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. மாமல்லபுரத்துக்கு முன்பாக கோவளத்தில் தனியார் நட்சத்திர விடுதி ஒன்று உள்ளது. கடற்கரையை ஒட்டியுள்ள மிக பிரம்மாண்டமான இந்த விடுதியில் சீன அதிபரும், பிரதமர் நரேந்திர மோடியும் தங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.
இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த விடுதிக்குள் ஹெலிகாப்டர் இறங்குவதற்கான வசதிகள் இருப்பதால், இருநாட்டுத் தலைவர்களும் அங்கேயே தங்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக் கின்றன. சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கும் தலைவர்கள் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கோவளம் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதனிடையே, இருநாட்டுத் தலைவர் களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்திக்கவும் வாய்ப்பு உள்ளது. பேச்சுவார்த்தையை நிறைவு செய்யும் இரு நாட்டுத் தலைவர்களும், அக்டோபர் 13-ஆம் தேதி சென்னையில் இருந்து தில்லி புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.
இந்நிலையில், மாமல்லபுரத்தில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா, மேற்கு ராஜ வீதி, கிழக்கு ராஜ வீதி, கடற்கரைக் சாலை, ஐந்துரதம் சாலை, கோவளம் சாலை உள்ளிட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் புதிய சாலை அமைக்கு பணி நடைபெற வருகிறது. பல்லவர் கால சிற்பங்கள் பொலிவூட்டப்படுகின்றன. இரு தலைவர்களும் நின்று புகைப்படம் எடுக்கும் ரதம் மற்றும் சிற்பங்கள் தேர்ந் தெடுக்கப்பட்டு உள்ளது.