அரபு நாட்டு தொழிலதிபர்களுடன் முதல்வர் இ.பி.எஸ். ஆலோசனை

புதன்கிழமை, 20 நவம்பர் 2019      தமிழகம்
cm edapadi consult businessmen 2019 11 20

சென்னை : ஐக்கிய அரபு நாடுகளின் தொழிலதிபர்கள் சென்னையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 750 கோடி மதிப்பிலான முதலீடு வழங்கிய நிறுவனங்கள் தங்களது பணிகளை தொடங்கியுள்ளன.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு முறை பயணம் மேற்கொண்டு முதலீடுகளை ஈர்த்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்ட துபாய் தொழில் தலைவர்கள் கூட்டமைப்பினருடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வெளிநாடுவாழ் தமிழர்கள் மற்றும் பிற முதலீட்டாளர்களிடமிருந்து தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்திடவும், நவீன தொழில்நுட்பங்களை அறிந்து, அவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்திடவும், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் குழுவினர் ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 9-ம் தேதி வரை அரசு முறை பயணம் மேற்கொண்டு 8,835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து, 35,520-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டனர்.

இப்பயணத்தின் நிறைவுப் பகுதியாக துபாயில் இந்தியத் துணைத் தூதரகம் மற்றும் தொழில் தலைவர்கள் கூட்டமைப்பு ஆகியோருடன் இணைந்து நடத்தப்பட்ட முதலீட்டாளர் சந்திப்பில் 3,750 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 10,800 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வுஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி, ஐக்கிய அரபு அமீரக அரசு நிறுவனமாகிய டிபி வேர்ல்டு நிறுவனம் சென்னை, எண்ணூர் அருகே 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 1,100 நபர்களுக்கு வேலைவாய்ப்புஅளிக்கும் வகையில் அமைக்கவுள்ள சரக்கு பெட்டக பூங்காவிற்கான பணிகளைத் துவங்கியுள்ளது. இந்நிறுவனம் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைத்திட மாநில அரசின் தடையின்மைச் சான்றும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பெட்ரோல் ஆட்டோக்களை சூழலுக்கு உகந்த மின்சார ஆட்டோக்களாக மாற்றி இயக்கும் திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் முதலீட்டில் துபாயின் கே.எம்.சி. குழுமம் மற்றும் மவ்டோ எலெக்ட்ரிக் மொபைலிட் ஆகியநிறுவனங்களுடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, மின்சார ஆட்டோக்கள் இம்மாத இறுதியில் படிப்படியாக இயக்கப்பட உள்ளதாக இந்நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதற்கு தேவையான அனுமதிகளும் அரசால் வழங்கப்பட்டுள்ளன.

இவை தவிர, பிற தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், உயர் அதிகாரிகள் கொண்ட உயர்மட்ட குழுவினர், முதலீடுகள் குறித்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், பல்வேறு தொழிற்பூங்காக்களில் உள்ள தகுந்த இடங்களை ஆய்வு செய்து தேர்ந்தெடுக்கவும், அரசுதுறைகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவும் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ளனர். இவர்களுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பூங்காக்கள், உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை பற்றி எடுத்துரைக்கப்பட்டது. மேலும், இந்நிறுவனங்களின் செயல்பாடுகள் தொடர்புடைய அரசு துறை உயர்அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனையில் தமிழ்நாட்டில் உள்ள வசதிகள், சிறப்புகள், சிறந்த மனிதவளம், தொழில் திட்டங்களுக்கு அரசு வழங்கி வரும் ஒற்றைச்சாளர அனுமதி உள்ளிட்ட வழிகாட்டுதல்கள், சிறப்பு சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் எடுத்துரைக்கப்பட்டது. இக்குழுவினர் பல்வேறு தொழிற்பூங்காக்களையும் நேரில் பார்வையிட உள்ளனர். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கும் ஒற்றைச்சாளர அனுமதிகளுக்கான உயர்மட்டக் குழு மூலம் விரைந்து வழங்கப்படும் அரசு அனுமதிகள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் முதலீட்டு வழிகாட்டி பிரிவு உள்ளிட்டவை குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில், துபாய் தொழில் தலைவர்கள் கூட்டமைப்பை சேர்ந்த ஜெயின்ட் குழுமத்தின் தலைவர் சுதேஷ் அகர்வால், இந்திய வர்த்தக கண்காட்சி மையத்தின் இயக்குநர் ஸ்ரீபிரியா குமாரியா, சன்னி குழுமத்தின் தலைவர் சன்னி குரியன், ஓசன் ரப்பர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கே.எம். நூர்தீன், ப்ரோகுளோபல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முகேஷ் கோச்சார், காம்ரோ சர்வதேச நிறுவனத்தின் துணைத் தலைவர் வின்சென்ட் ஜோஸ்நீவ்ஸ், குழுமத்தின் தலைவர் இப்ராஹிம், குழுமத்தின் பங்குதாரர் ஸ்வேதா பாலசுப்பிரமோணி, துணைத்தலைவர் சக்திவேல் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்குழுவினரிடையே கலந்துரையாடிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி , தொழில் துவங்கிட தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள துபாய் தொழில் தலைவர்கள் கூட்டமைப்பினரை வரவேற்றதோடு, இந்நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் அரசால் செய்து தரப்படும் என உறுதியளித்தார்.  மேலும், புதிய முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ளவும் அழைப்பு விடுத்தார். பின்னர் இக்குழுவினர், தொழில் திட்டங்களை விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர தமிழ்நாடு அரசு அளித்து வரும் ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் தங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன், தொழில் துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன் தீப்சிங் பேடி, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் முனைவர் நீரஜ்மிட்டல், தொழில் துறை சிறப்புச் செயலாளர் அருண்ராய் சிப்காட் மேலாண்மை இயக்குநர் குமரகுருபரன், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் கார்த்திகேயன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து