முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிர்பயா கொலை குற்றவாளி மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : தூக்கு தண்டனையில் இருந்து தப்பிக்கும் கடைசி முயற்சியாக நிர்பயா கொலை குற்றவாளி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள புதிய மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.  

டெல்லியில் நடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரில் ஒருவரான ராம்சிங் என்பவர் டெல்லி திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 
மற்ற 4 குற்றவாளிகளான முகேஷ்குமார் சிங் (வயது 23), பவன்குமார் குப்தா (25), வினய் சர்மா (26), அக்ஷய்குமார் சிங் (31) ஆகியோருக்கு விசாரணை கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. பின்னர் அந்த தண்டனையை டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தன. அவர்களுடைய மறுஆய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து, குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ்குமார் சிங் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். அவரது கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து, அவர்கள் 4 பேரையும் வருகிற பிப்ரவரி 1-ந் தேதி காலை 6 மணிக்கு தூக்கில் போடுமாறு டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி சதீஷ்குமார் அரோரா  புதிய மரண வாரண்டை பிறப்பித்தார். இதனால் அவர்களை தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகளை சிறை நிர்வாகம் செய்து வருகிறது.

இந்த நிலையில், தூக்கு தண்டனையில் இருந்து தப்பிக்கும் கடைசி முயற்சியாக 4 பேரில் ஒருவரான பவன்குமார் குப்தா,  சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் குற்றம் நடந்த போது தான் சிறுவன் (இளம் குற்றவாளி) என்றும், எனவே தன்னை தூக்கில் போடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். இதே காரணத்தை குறிப்பிட்டு தான் தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு கடந்த மாதம் 19-ந் தேதி தள்ளுபடி செய்தது பற்றியும் மனுவில் அவர் தெரிவித்து இருக்கிறார்.

பவன்குமார் குப்தாவின் இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷண், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.

மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள 4 குற்றவாளிகளில் முகேஷ்குமார் சிங் மட்டும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். அவரது மனு  நிராகரிக்கப்பட்டது. மற்ற மூவரும் கருணை மனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து