சென்னை : தமிழக காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு முறை குறித்த அறிவிப்பிற்கு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு அளிப்பது குறித்து தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ், அனைத்து காவல் கண்காணிப்பாளர்கள், மற்றும் காவல் ஆணையர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து காவலர்களுக்கு பணி விதிகள்படி வாரத்தில் 6 நாள் வேலை பார்த்தால், ஒரு நாள் விடுப்பு வழங்க தமிழக காவல்துறை திட்டமிட்டுள்ளது. வாரத்தில் ஏதாவது ஒரு நாள் விடுப்பும், ஞாயிற்றுக்கிழமை விடுப்பை சுழற்சி முறையில் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், கடமையைச் செய்பவர்களுக்கு ஓய்வு கொள்ளவும், உழைப்பைக் கொடுப்பவர்களுக்கு இளைப்பாறவும் உரிமை உண்டு என்று கூறியுள்ளார்.
சுழற்சி முறையிலோ வேறு விதத்திலோ பிற அரசு ஊழியர்கள் போல் காவல் துறையினருக்கும் ஓய்வு கொடுக்க முன் வந்துள்ளது பாராட்டுக்குரியது என்றும் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.