முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணி: விவசாயிகளுடனான 8-வது கட்ட பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி: வரும் 15-ல் அடுத்த கட்ட பேச்சு

வெள்ளிக்கிழமை, 8 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது தொடர்பாக மத்திய அரசுடன் நடைபெற்ற விவசாயிகளின் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியடைந்துள்ளது. இதனையடுத்து வரும் 15-ம் தேதி அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஏற்கெனவே நடைபெற்ற 7 கட்ட பேச்சுவார்த்தையில் எந்த சமரச முடிவும் எட்டப்படாத நிலையில், நேற்று (ஜன. 8) 8-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கிய இந்த பேச்சுவார்த்தையில் 40 விவசாய சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அவர்களுடன் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.  டெல்லி விஞ்ஞான் பவனில் சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக நேற்று டெல்லி எல்லைகளில் முகாமிட்டு இருந்த  விவசாயிகள் தங்கள் டிராக்டர்களில் டெல்லியின் புறநகர் பகுதியில் டிராக்டர் பேரணி நடத்தினர்.

இதில் 3500-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் சாலைகளில் பேரணியாக அணிவகுத்தன. இதில் அரியானாவில் இருந்து மட்டுமே 2,500-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் விவசாயிகள் பங்கேற்றனர்.  இந்த பேரணி 4 முக்கிய பகுதிகளில் நடந்தது. சிங்கு எல்லையில் இருந்து திக்ரி எல்லைக்கும், திக்ரியில் இருந்து குண்ட்லி நோக்கியும், காஜிப்பூர் எல்லையில் இருந்து பல்வாலை நோக்கியும், ரேவாசனில் (அரியானா) இருந்து பல்வாலை நோக்கியும் விவசாயிகள் இந்த மாபெரும் பேரணியை நடத்தினர்.

டிராக்டர்களில் தேசியக்கொடிகள், தடதடக்கும் ஜெனரேட்டர்கள், பஞ்சாபி மொழியில் ஒலித்த பாடல்கள், அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுந்தன. பேரணியில் சென்ற விவசாயிகள் தின்பண்டங்கள், நொறுக்குத்தீனிகள், தண்ணீர் பாட்டில்கள் என பெரும் தயாரிப்புடன் கலந்து கொண்டனர். இந்த பேரணியை முன்னிட்டு சிங்கு, திக்ரி, காஜிப்பூர் எல்லைகளில் பாதுகாப்புக்காக டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த போலீசார் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டு இருந்தனர்.

பேரணியில் பங்கேற்காத பெண்கள், வயதான விவசாயிகள் அனைவரும் தொடர்ந்து தங்கள் போராட்டக்களத்திலேயே தங்கியிருந்தனர். அவர்களுக்கான உணவு, மருந்து உள்ளிட்டவை வழக்கம்போல அங்கு வழங்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து