முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சட்டசபை தேர்தலில் விநோதம்: சீமானின் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் 29.58 லட்சம்: ஆனால் ஒரு இடம் கூட கிடைக்காதது ஆச்சரியம்

செவ்வாய்க்கிழமை, 4 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி 29 லட்சத்து 58 ஆயிரத்து 458 வாக்குகள் பெற்றுள்ளது. அதாவது இத்தேர்தலில் 3-வது இடத்தை பிடித்துள்ள இக்கட்சிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காமல் போனதுதான் விந்தையிலும் விந்தை. 

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2-ம் தேதி எண்ணப்பட்டன. இதில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வுக்கு 36.30 சதவீத வாக்குகள் கிடைத்தன. அதற்கு அடுத்தபடியாக அ.தி.மு.க.வுக்கு 33.29 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இந்த இருபெரும் கட்சிகளுக்கு அடுத்தபடியாக 3-வது பிடித்துள்ள கட்சிதான் சீமானின் நாம் தமிழர் கட்சி. இவரது கட்சிக்கு 29 லட்சத்து 58 ஆயிரத்து 458 வாக்குகள் கிடைத்துள்ளன. அதாவது, இந்த தேர்தலில் இவரது கட்சிக்கு 6.85 சதவீத வாக்குகள் கிடைத்து 3-ம் இடத்தை பிடித்துள்ளது. இப்படி 29.58 லட்சம் வாக்குகள் பெற்றும் கூட சீமானின் கட்சி தமிழகத்தில் ஒரு இடத்தை கூட கைப்பற்றாததுதான் மிகப் பெரிய ஆச்சரியம். காரணம், இவரது கட்சிக்கு அடுத்தபடியாக 4-வது இடத்தில் வந்துள்ள காங்கிரஸ் கட்சி 100 ஆண்டு பாரம்பரியம் உள்ள கட்சி. அந்த கட்சிக்கு 19.06 லட்சம் வாக்குகளே கிடைத்துள்ளன. அதாவது இக்கட்சிக்கு 4.41 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன.

ஆனால் இந்த கட்சி கிட்டத்தட்ட 17 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. சீமானின் கட்சியை விட 10 லட்சம் வாக்குகள் குறைவாக பெற்றும் கூட காங்கிரஸ் கட்சி இத்தனை தொகுதிகளை வென்றுள்ளது. 5-ம் இடத்தை பிடித்துள்ள பா.ம.க. 17.45 லட்சம் வாக்குகள் பெற்று 4.04 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. பாரதீய ஜனதா கட்சிக்கு இந்த தேர்தலில் 6-ம் இடமே கிடைத்துள்ளது. இக்கட்சி பெற்றுள்ள வாக்குகள் 11 லட்சத்து 80 ஆயிரத்து 456 ஆகும். இக்கட்சி பெற்றுள்ள வாக்கு சதவீதம் 2.73 சதவீதம் மட்டுமே. டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. கட்சி 2.47 சதவீத வாக்குகளை பெற்று 7-ம் இடத்தை பிடித்துள்ளது. இவரது கட்சி பெற்ற வாக்குகள் 10 லட்சத்து 65 ஆயிரத்து 142 ஆகும். கமலஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி 2.45 சதவீத வாக்குகளை பெற்று 8-ம் இடத்தையே பிடிக்க முடிந்துள்ளது.

இவரது கட்சி பெற்றுள்ள வாக்குகள் 10.58 லட்சம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1.17 சதவீத வாக்குகளை பெற்று 9-ம் இடத்தை பிடித்துள்ளது. இந்த கட்சி பெற்றுள்ள வாக்குகள் 5.04 லட்சம். ஆனால் இந்த கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. வைகோ தலைமையிலான ம.தி.மு.க. 1.13 சதவீத வாக்குகளை பெற்று 10-ம் இடத்தையே பிடித்துள்ளது. இந்த கட்சி பெற்றுள்ள வாக்குகள் 4 லட்சத்து 86 ஆயிரத்து 979 ஆகும். ஆனால் இந்த கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.

திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கிடைத்துள்ள வாக்குகள் வெறும் 1.06 சதவீதம் மட்டுமே. இவரது கட்சி 4.57 லட்சம் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. ஆனால் வெற்றி பெற்ற இடம் 4 தொகுதிகள். இப்படி சீமானின் கட்சியை விட பல லட்சம் வாக்குகள் குறைவாக பெற்றும் மேற்கண்ட கட்சிகள் வெற்றிக்கொடி நாட்டியுள்ளன. ஆனால் கிட்டத்தட்ட 30 லட்சம் வாக்குகளை பெற்றும் கூட சீமானின் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாதது விந்தையிலும் விந்தை.

இந்த தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. படுபாதாளத்திற்கு சென்று விட்டது. இக்கட்சிக்கு கிடைத்த வாக்குகள் 0.45 சதவீதம் மட்டுமே. அதாவது தமிழகம் முழுவதும் இந்த கட்சிக்கு ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 610 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. கட்சி தொடங்கி தேர்தலை சந்தித்த போது விஜயகாந்த் கட்சிக்கு கிட்டத்தட்ட 8 சதவீத வாக்குகள் கிடைத்திருந்தன. ஆனால் இப்போது 0.45 சதவீதம் என்ற அளவுக்கு விஜயகாந்த் கட்சி படு வீழ்ச்சியை சந்தித்தது அவரது தொண்டர்களை வேதனைக்குள்ளாக்கி உள்ளது.  

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து