முக்கிய செய்திகள்

மெக்சிகோ: துப்பாக்கி சூட்டில் இந்தியர் உள்பட 2 பேர் பலி

Gan 2021 10 22

Source: provided

குயின்டனாரோ : மெக்சிகோவில் போதை மருந்து விற்கும் கும்பல்களிடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் இந்தியர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

மெக்சிகோ உலக போதை மருந்து வர்த்தகத்தின் தலைமையிடமாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான போதை மருந்து கடத்தல் கும்பல்கள் இருக்கின்றன. அவர்களுக்குள் வியாபார போட்டி காரணமாக அடிக்கடி மோதல் நடக்கும். அதில் துப்பாக்கி சண்டையும் இடம்பெறும். இதில் ஏராளமானோர் பலியாவது அடிக்கடி நடைபெறும் நிகழ்வாக இருக்கிறது.

இந்த நிலையில் குயின்டனாரோ மாகாணத்தில் உள்ள துலும் நகரில் போதை மருந்து கும்பல்கள் மோதிக் கொண்டன. துலும் நகரம் மெக்சிகோ நாட்டின் முக்கிய கடற்கரை சுற்றுலா நகரமாகும். இங்கு ஏராளமான தெருவோர ஓட்டல்கள் இருக்கின்றன. அங்கு ஒரு ஓட்டலில்தான் போதை மருந்து கும்பல்கள் மோதின. அப்போது இரு தரப்பினரும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர். இதில் ஓட்டலில் இருந்த சுற்றுலா பயணிகள் சிக்கிக் கொண்டார்கள். அவர்கள் மீதும் குண்டுகள் பாய்ந்தன.

இதில் 2 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்களில் ஒருவர் இந்தியாவை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மற்றொருவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பெண் ஆவார். இறந்த இந்தியரின் பெயர் விவரங்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை. அவர் எதற்காக அங்கு சென்றார்? என்ற விவரமும் கிடைக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து