முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிட்காயின் கரன்சியாக அங்கீகரிப்பா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா பதில்

திங்கட்கிழமை, 29 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

பிட்காயினை கரன்சியாக அங்கீகரிக்க எந்தவிதமான திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என்று மக்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.

கடந்த 2008-ம் ஆண்டு அடையாளம் தெரியாத குழுக்களால் பிட்காயின் சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. வங்கிகள், கிரெடிட் கார்டு நிறுவனங்கள் தலையீடு ஏதும் இல்லாமல், அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றாமல் பொருட்கள், சேவை பெறவும் பணப் பரிமாற்றத்துக்கும் பிட்காயின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிலும் பிட்காயினில் முதலீடு செய்வது, பிட்காயினில் வர்த்தகம் செய்வது, பரிமாற்றம் செய்வது அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, இந்தக் குளிர்காலக் கூட்டத்தொடரில் கிரிப்டோ கரன்சிகளை ஒழுங்குமுறைப்படுத்தும் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்கிறது. இந்த மசோதாவின் மூலம் சில தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கு இந்தியாவில் தடை கொண்டுவரப்படும். அதே நேரம், ரிசர்வ் வங்கி மூலம் அல்லது ஒப்புதலுடன் அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சி கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் மக்களவையில் கிரிப்டோ கரன்சி குறித்த கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ''பிட்காயினை ஒரு கரன்சியாக அங்கீகரிக்க மத்திய அரசுக்கு திட்டம் ஏதும் இல்லை. பிட்காயின் குறித்த எந்தவிதமான புள்ளிவிவரத்தையும் மத்திய அரசு சேகரிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், “அமைச்சகங்கள் மற்றும் துறைகள் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ரூ.2.29 லட்சம் கோடி முதலீட்டுச் செலவாக செலவிட்டுள்ளன. அதாவது 2021-22-ம் ஆண்டு பட்ஜெட் தொகையான ரூ.5.54 லட்சம் கோடியில் 41 சதவீதம் செலவிடப்பட்டுள்ளது. கடந்த 2020-21-ம் நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, இந்தச் செலவு 38% அதிகம்தான். நாட்டின் பொருளாதாரத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தத்தான் முதலீட்டுச் செலவு செய்யப்படுகிறது.

இதற்காகவே மத்திய அரசு தேசிய கட்டமைப்புக்கான திட்டம் (என்ஐபி) கொண்டுவந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் 2020-2025-ம் ஆண்டுக்குள் ரூ.111 லட்சம் கோடி செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் செலவுகள் மூலம் நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பட்டு, மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்” எனத் தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த கேள்விக்கு நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கையில், “மத்திய அரசு பெட்ரோல் மீது ரூ.5, டீசல் மீது ரூ.10 உற்பத்தி வரியைக் கடந்த 4-ம் தேதி குறைத்துள்ளது. அதன்படி மாநில அரசுகளும் வாட் வரியைக் குறைக்கக் கோரினோம். பல மாநிலங்கள் குறைத்துள்ளன. இதனால் பெட்ரோல், டீசல் சில்லறை விலை சந்தையில் குறைந்து வருகிறது” என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து