முக்கிய செய்திகள்

தேங்கியுள்ள மழைநீரை அகற்ற போர்க்கால நடவடிக்கை தேவை: விஜயகாந்த் கோரிக்கை

புதன்கிழமை, 1 டிசம்பர் 2021      தமிழகம்
Vijaykanth 2021 11 03

சென்னையில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தே.மு.தி.க. நிறுவன தலைவரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது. மேலும், மழை வெள்ளத்தால் சென்னையில் உள்ள அனைத்து சாலைகளும் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.

தற்போது மழை சிறிது ஓய்ந்திருக்கும் நிலையில், குடியிருப்பு பகுதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் மழைநீர் இன்னும் வடியாததால் சென்னை மாநகரம் தீவு போல் காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மேலும், தேங்கியிருக்கும் மழை நீரால் பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாலைகள் மற்றும் தெருக்களில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் ஆறாக ஓடுவதால், அதில் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய் தொற்றுகளும் வேகமாக பரவி வருகிறது.

மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தமிழக முதல்வர் ஆய்வு செய்தால் மட்டும் போதாது, மழை நீரை அகற்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியும் காலம் தாழ்த்தாமல் சென்னையில் தேங்கியுள்ள மழை நீரை ராட்சத குழாய்கள் மூலம் அகற்ற தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து