முக்கிய செய்திகள்

இணையவழி வினாடி வினா போட்டியில் தேர்ச்சி பெற்று துபாய் செல்லவுள்ள ஆதி திராவிட பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 7 டிசம்பர் 2021      தமிழகம்
Kayalvizh- 2021 12 07

Source: provided

சென்னை : இணைய வழி வினாடி வினா போட்டியில் தேர்ச்சி பெற்று துபாய் செல்லவுள்ள ஆதி திராவிட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பாராட்டு தெரிவித்தார். 

சென்னை எழிலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகக் கூட்டரங்கில் அமைச்சர்   கயல்விழி செல்வராஜ் தலைமையில் ஆசிரியர் மற்றும் காப்பாளர்களின் பல்வேறு சங்கங்களின் கோரிக்கைகளை கேட்டறியும் கூட்டம் நேற்று நடைபெற்றது.  இக்கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர். க. மணிவாசன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையர் மதுமதி,  தாட்கோ மேலாண்மை இயக்குநர் விவேகானந்தன், பழங்குடியினர் நல இயக்குநர் வ.சி. ராகுல், மற்றும் பல்வேறு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது, 

ஆதிதிராவிடர் நலத் துறையின் பள்ளி ஆசிரியர்கள் பள்ளி குழந்தைகளுக்கு பொது அறிவு, விளையாட்டுகள் போன்ற பல்வேறு நல்ல பழக்கவழக்கங்களை கற்பிக்க வேண்டும். மேலும், ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களும் மாணக்கர்களை தங்கள் குழந்தைகள் போன்று பேணி பாதுகாத்திட வேண்டும்.  விடுதியில் தங்கி பயிலும் மாணாக்கர்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் முழு கவனத்தை காப்பாளர்கள் செலுத்த வேண்டும்.  மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு சுத்தமான முறையிலும் உணவுப் பட்டியலின்படி தரமான உணவு வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். 

மேலும் மாணக்கர்களின் கல்வியை பொறுத்த வரையில் அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அத்திட்டங்கள் மாணவ,  மாணவிகளை சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.  மேலும், விடுதிகளில் மாலை நேரங்களில் மாணக்கர்கள் படிக்கும் போது பாடம் சம்பந்தமான கேள்விகளை கேட்டு மாணக்கர்களின் படிக்கும் திறனை ஊக்குவிக்க வேண்டும்.

ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு தொடர்பாக, ஆசிரியர்களின் முதுநிலை பட்டியல் விரைந்து தயார் செய்யப்பட்டு பின்னர் கலந்தாய்வு நடத்தப்பட்டு  விரைவில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும். மேலும் பள்ளிக் கல்வித்துறையில் பின்பற்றப்படும் பணியிடங்களைப் போன்று தான் ஆதிதிராவிடர் நலத்துறையிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் பணியின்போது உயிரிழந்த ஆசிரியர் மற்றும் காப்பாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கிட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு அறிவுத்துள்ள ஊதிய விதிகளின்படியே  இத்துறையிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது, எனினும் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் கனிவுடன்  பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், கூட்ட முடிவில் 10-ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், கொரோனா காரணமாக ஏற்பட்டிருந்த கற்றல் இடைவெளியை குறைக்கவும் பள்ளிக் கல்வித்துறையால் நடத்தப்பட்ட இணையவழி வினாடி வினாவில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் கல்வித் துறையின் சார்பில் ஐக்கிய அரபு அமீரக நாட்டிலுள்ள துபாய் நகரத்திற்கு சுற்றுலா செல்ல உள்ள புதுக்கோட்டை மாவட்டம் என்ணை கிராமம், திருவள்ளூர் மாவட்டம் வடகரை மற்றும் மதுரை மாவட்டம் சங்கரலிங்காபுரம் ஆகிய ஊர்களில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் பயின்று வரும் 4 மாணவ, மாணவிகளை அமைச்சர் வாழ்த்தி பாராட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து