முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செய்திக்குறிப்பில் எம்.ஜி.ஆர். குறித்து உண்மைக்கு புறம்பாக திரித்து கூறுவதா? - தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ். கண்டனம்

புதன்கிழமை, 19 ஜனவரி 2022      அரசியல்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சென்னை கிண்டியிலுள்ள மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் என்று மறைந்த தி.மு.க. தலைவர் பெயர் சூட்டியதாக உண்மைக்கு புறம்பாக திரித்து கூறப்பட்டுள்ளது  என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.  

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், 

வரலாறு படைத்தவர்களுக்கு மத்தியில், வரலாற்றில் இடம்பெற்ற அரசியல் கட்சிகளுக்கு மத்தியில், வரலாற்றை திரித்து எழுதும் ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது தி.மு.க. என்றால் அது மிகையாகாது. எம்.ஜி.ஆரின் பிறந்த நாளினை முன்னிட்டு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்ற அரசின் செய்தி வெளியீட்டில், மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, திரைக்கதை வசனம் எழுதிய திரைப்படங்களின் வாயிலாக எம்.ஜி.ஆருக்கு தனியிடம் கிடைத்தது என்றும், மறைந்த தி.மு.க. தலைவரால்  வழங்கப்பட்ட புரட்சி நடிகர் என்ற பட்டமே பின்னர் புரட்சித் தலைவர் என்று நிலை பெற்றது என்றும், சென்னை கிண்டியிலுள்ள மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் என்று மறைந்த தி.மு.க. தலைவர் பெயர் சூட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது.  இவை அனைத்தும் உண்மைக்குப் புறம்பான, வரலாற்றை திரித்து எழுதும் செயலாகும். 

இயற்கையாகவே அனைவரையும் வசீகரிக்கும் திறன் படைத்தவர் புரட்சித் தலைவர் அவர்கள். அவர் திரையுலகில் கொடிகட்டி பறந்ததற்குக் காரணம் அவருக்குள்ள தனித்தன்மை. நீ முகம் காட்டினால் முப்பது இலட்சம் வாக்குகள் நிச்சயம் என்று பேரறிஞர் அண்ணாவால் போற்றப்பட்டவர் எம்.ஜி.ஆர். 1977-ம் ஆண்டு தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தி, அ.தி.மு.க. ஆட்சியை ஏற்படுத்தி, தொடர்ந்து மூன்று முறை யாராலும் வெல்ல முடியாத ஒரு புரட்சியை செய்ததால் அவருக்கு மக்களே புரட்சித் தலைவர் என்று பெயர் சூட்டினார்கள் என்பதுதான் உண்மை. 

மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் என்று மறைந்த தி.மு.க. தலைவர் பெயர் சூட்டியதாக அரசு செய்தி வெளியீட்டில் கூறப்பட்டுள்ளது.  இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்குச் சமம். எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தபோதே மருத்துவத்திற்கு என்று தனிப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டு விட்டது. இதில் இருந்து மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் என்று மறைந்த தி.மு.க. தலைவர் பெயர் சூட்டினார் என்ற வாதம் வடிகட்டின பொய் என்பது தெளிவாகிறது. 

உண்மை நிலை இவ்வாறிருக்க, தேவையில்லாதவற்றை அரசு செய்தி வெளியீட்டில் சேர்த்து தமிழகத்தின் புகழ் பெற்ற தலைவரை சிறுமைபடுத்துவது என்பதும் கடும் கண்டனத்திற்குரியது. இனி வருங்காலங்களில் இதுபோன்று வரலாற்றை திரித்து எழுதும் முயற்சியை கைவிடுவது நல்லது என்பதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இவ்வாறு அதில் ஓ.பி.எஸ்.தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து