முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பரிசுத் தொகுப்பு முறைகேடு விவகாரம்: தி.மு.க. அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 21 ஜனவரி 2022      அரசியல்
Image Unavailable

Source: provided

சென்னை  பொங்கல் பரிசுத் தொகுப்பில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து தி.மு.க. அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுமார் 1,250 கோடி ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தி.மு.க. அரசால் வழங்கப்பட்டன. இதில் உள்ள பொருட்களை சாப்பிட்ட சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டது என்று பொது மக்களிடம் இருந்து புகார்கள் வந்தன.  

இது குறித்து உணவுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  குறைந்த விலைப்புள்ளி கொடுத்த நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டதாக கூறியிருக்கிறார்.  அவரது கூற்றுப்படி குறைந்த விலைப்புள்ளி கொடுத்த நிறுவனம் தரமற்ற பொருட்களை விநியோகம் செய்தால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுபோல் உள்ளது. 

உண்மை நிலை என்னவென்றால், பெரும்பாலான இடங்களில் தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டும், எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுதான் குற்றச்சாட்டு. அமைச்சரின் பதிலைப் பார்க்கும்போதே இதில் முறைகேடு நடந்து இருப்பது என்பது ஊர்ஜிதமாகிறது. 

அ.தி.மு.க.ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்தன. மக்கள் பணம் மக்களைச் சென்றடைந்தது. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக பொங்கல் திருநாளைக் கொண்டாடினார்கள். 

தற்போதைய தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட பொருட்கள் எதுவுமே மக்களுக்கு பயனுள்ளதாக அமையவில்லை. மொத்தத்தில் மக்களின் பணம், அரசினுடைய பணம் கிட்டதட்ட 1,250 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டு விட்டது.  

எனவே, இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட பொருட்களின் கொள்முதல் குறித்து விரிவான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு உடனடியாக வெளியிட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து