முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர், ஈரோட்டில் நூல் விலை உயர்வை கண்டித்து 20 ஆயிரம் பனியன், ஜவுளி நிறுவனங்கள் அடைப்பு : 410 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு

திங்கட்கிழமை, 16 மே 2022      தமிழகம்
Tirupur 2022 05 16

Source: provided

திருப்பூர் : நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர், ஈரோட்டில் இருக்கும் 20 ஆயிரம் பனியன், ஜவுளி நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. 2 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரூ.410 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

நூல் விலை உயர்வுக்கு எதிராக திருப்பூர், ஈரோட்டில் பின்னலாடைத் தொழில் அமைப்புகள், ஜவுளி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. கடந்த சில மாதங்களாக நூல் விலை அபரிதமாக உயர்ந்து வரக்கூடிய சூழ்நிலையில் இம்மாதம் கிலோ 40 ரூபாய் வரை விலை உயர்ந்து 470 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வரலாறு காணாத வகையில் பஞ்சு விலையும் உயர்ந்து இருப்பதன் காரணமாக இனி வரும் மாதங்களில் நூல் விலை மீண்டும் உயரும் அபாயம் இருப்பதாகவும் உடனடியாக மத்திய அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், பருத்தி பதுக்கலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதியை ரத்துசெய்து உள்நாட்டு உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டும், நூல் இறக்குமதிக்கான வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது.

திருப்பூரில் மட்டும் சுமார் 10 ஆயிரம் பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் இந்த பொது வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். போராட்டம் காரணமாக நாளொன்றுக்கு ரூ.360 கோடி ரூபாய் வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. 

திருப்பூர் சரக்கு போக்குவரத்து சங்கமும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் திருப்பூரில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லும் சரக்கு வாகன இயக்கமும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் ஆர்ப்பாட்டமும் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து கிளாக் மெர்சண்ட்ஸ் அசோசியேசன் சார்பில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஜவுளி கடைகள் நேற்று முதல் இரண்டு நாட்கள் கடையடைப்பு போராட்டத்தை தொடங்கியது. நூல் விலை உயர்வால் ஜவுளி ரகங்களின் விலை உயர்ந்துள்ளதுடன், வணிகமும் பாதியாக சரிந்துள்ளது. இதனால் ஜவுளி வணிகர்களும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த போராட்டத்தில் ஈடுபடுவதாக வணிகர்கள் தெரிவித்தனர்.

ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து நூல் விற்பனையை நீக்கவும் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்கவும் வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு ஜவுளி சந்தை கடைகளும் நேற்றும், இன்றும் அடைக்கப்படுகின்றன. ஜவுளி சந்தையில் 280 தினசரி கடைகளும், 780 வாரசந்தை கடைகளும், அசோகபுரத்தில் 2 ஆயிரம் கடைகள், டி.வி. எஸ் வீதியில் 150 கடைகள், சென்ட்ரல் தியேட்டர் மார்க்கெட்டில் 1500 கடைகள் இரண்டு நாட்கள் கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்கின்றன.

ஈரோடு மாநகரில் இந்த போராட்டத்தில் பங்கேற்று 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி வர்த்தக மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும் ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, திருவேங்கடசாமி வீதி, என்.எம்.எஸ் காம்பவுண்ட், அகில்மேடு வீதி, காமராஜர் வீதி ராமசாமி வீதி போன்ற பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் நூல் உயர்வை கண்டித்து 2 நாட்கள் கடையடைப்பு போராட்டம் குறித்த நோட்டீஸ்கள் கடைகளில் ஒட்டப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து