முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் கட்சியில் இருந்து கபில் சிபல் திடீரென விலகல்

புதன்கிழமை, 25 மே 2022      இந்தியா
Kapil-Sibal 2022-05-25

Source: provided

லக்னோ : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் அக்கட்சியில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்துள்ளார். மே 16-ஆம் தேதியே காங்கிரஸ் கட்சியில் இருந்து தான் விலகிவிட்டதாகவும், சுதந்திரக் குரலாக ஒலிக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாநிலங்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் இருந்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிட வேட்புமனுவை கபில் சிபல் நேற்று (மே 25) தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கபில் சிபல், "நான் மே 16-ஆம் தேதியே காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிவிட்டேன். மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட சுயேட்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளேன்.

நான் எப்போதுமே நாட்டில் சுதந்திரமான குரலாக ஒலிக்க விரும்புகிறேன். மோடி ஆட்சியை அகற்ற வலுவான கூட்டணி வேண்டும். ஆசம் கான் இப்போதும், எப்போதும் எனக்கு உறுதுணையாக இருப்பதற்கு நன்றி" என்றார். காங்கிரஸ் மீது அதிருப்தி கொண்டு செயல்பட்டு வந்த மூத்த தலைவர்கள் அடங்கிய ஜி23 குழுவில் கபில் சிபல் முக்கியப் பங்கு வகித்துவந்தார். இந்நிலையில், அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்தே விலகி இருக்கிறார்.

அண்மையில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவை லக்னோவில் நேரில் சந்தித்தார் கபில் சிபல். இந்நிலையில், சமாஜ்வாதி ஆதரவுடன் மாநிலங்களவை தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக அவர் நேற்று மனு தாக்கல் செய்தார். அப்போது அகிலேஷ் யாதவும் உடன் இருந்தார்.

உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 111 எம்.எல்.ஏ.க்கள் சமாஜ்வாதிக்கு உள்ளனர். இவர்களின் ஆதரவோடு மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலை கபில் சிபல் எதிர்கொள்வதால் வெற்றி நிச்சயம் என்ற சூழல் உள்ளது. கபில் சிபலுக்கும் சமாஜ்வாதிக்கும் இடையே இதுவரை வழக்கறிஞர் என்ற முறையிலேயே தொடர்பு இருந்தது. அக்கட்சியின் மூத்த தலைவரான ஆசம் கான் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் கபில் சிபல் தான் வாதாடி வந்தார். ஆசம் கானுக்கு இடைக்கால ஜாமீன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!