முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி, துணை ஜனாதிபதியின் சந்திப்பு மன நிறைவாக இருந்தது : டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2022      தமிழகம்
CM-1 2022-08-17

Source: provided

புதுடெல்லி : ஜனாதிபதி, துணை ஜனாதிபதியின் சந்திப்பு மன நிறைவாக இருந்ததாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். 

டெல்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து நேற்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து புதிதாக பதவி ஏற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்க ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார். அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதியை சந்தித்து மலர் கொத்து கொடுத்து பொன்னாடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த சந்திப்பானது சுமார் 20 நிமிடம் நடைபெற்றது. அதன்பின்னர் டெல்லியில் உள்ள பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, 

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோரின் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு வந்திருந்தது, ஆனால் என்னால் வர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அவர்களை சென்று சந்தித்து என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து வந்திருக்கிறேன்.

இரண்டு பேரும் என்னிடத்தில் மகிழ்ச்சியாக தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலைகள், ஆட்சியினுடைய சிறப்புக்களைப் பற்றியெல்லாம் என்னோடு பகிர்ந்து கொண்டார்கள். எனவே என்னைப் பொறுத்தவரை, இந்தச் சந்திப்பு மன நிறைவாக இருந்தது என்று தெரிவித்தார்

அதை தொடர்ந்து ஜனாதிபதியிடம்  நீட் விலக்கு மசோதாவிற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறீர்களா? என நிருபர்கள் கேட்டதற்கு, ஏற்கனவே இருந்த ஜனாதிபதியிடம் இந்தக் கோரிக்கையை வைத்திருக்கிறோம். அதே மாதிரி, பிரதமரிடத்திலும் தொடர்ந்து கோரிக்கை வைத்திருக்கிறோம். எந்தக் கோரிக்கையும் ஜனாதிபதியிடம் வைக்கவில்லை. மரியாதை சந்திப்பு தான். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து