முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழிற்பூங்கா என்ற பெயரில் விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது : ஆணையை திரும்பப் பெற ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

புதன்கிழமை, 30 நவம்பர் 2022      தமிழகம்
OPS 2022-10-29

Source: provided

 சென்னை : தொழிற்பூங்கா என்ற பெயரில் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் ஆணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

சென்னைக்கு அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக 2,300 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை எடுத்த தி.மு.க. அரசு, தற்போது, கோவையில் தொழிற்பூங்கா அமைப்பதற்காக 3,900 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. இது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் செயலாகும். 

விவசாயிகளுக்கு எதிரான தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கையினை கண்டித்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டதாகவும், இந்தத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டி பவானி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. 

இந்த திட்டத்தின் காரணமாக கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் பெரும் பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானி ஆறு நோய் பரப்பும் மையமாக மாறி விடும் என்றும், குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளுக்காக நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் அத்திக்கடவு - அவினாசி திட்டம் மூலம் மாசுபட்ட கழிவு நீரைத் தான் குளங்களில் நிரப்ப முடியும் என்றும், இதன்மூலம் இந்தத் திட்டத்தினுடைய நோக்கமே கேள்விக்குறியாகிவிடும் என்றும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

எனவே அவர்களுடைய கருத்துகளுக்கு மதிப்பளித்து, உழவுத் தொழில் மேலோங்கும் வகையில், கோயம்புத்தூரில் இரண்டு தொழிற்பேட்டை பூங்காக்கள் அமைக்கும் முடிவினை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று தமிழக முதல்வரை அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து