முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: மனு தாக்கல் செய்யும் பணி நாளை முடிவுக்கு வருகிறது : 10-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2023      தமிழகம்
EVKS 2023 02 03

Source: provided

மதுரை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நடந்து வரும் வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி நாளை 7-ம் தேதி முடிவுக்கு வருகிறது. இதையடுத்து வரும் 10-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. இந்த தேர்தலில் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வே.ரா. சமீபத்தில் மரணம் அடைந்ததை அடுத்து இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து இத்தொகுதியில் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. 

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறக் கூடிய முதல் இடைத்தேர்தலாக இருப்பதால் இது தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தி.மு.க. கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். அவர் தற்போது தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

முன்னதாக இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 31-ம் தேதி தொடங்கியது. இதில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டார். அவரை தொடர்ந்து சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்தன், டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. வேட்பாளர் சிவபிரசாந்த் ஆகியோர் மனு தாக்கல் செய்து விட்டனர். 

இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடப் போவதில்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக அறிவித்து விட்டார். ஆக, மனு தாக்கல் செய்ய வேண்டிய ஒரே கட்சியாக தற்போது அ.தி.மு.க. உள்ளது. அனேகமாக அ.தி.மு.க. வேட்பாளர் வரும் 7-ம் தேதி அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் நாளை 7-ம் தேதி முடிவுக்கு வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட 46 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் மனு தாக்கல் நடைபெறவில்லை. இன்றும், நாளையும் மனு தாக்கல் நடைபெறும். வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள். மறுநாள் 8-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற 10-ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் மனுக்கள் வாபஸான பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து