முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாக்கி இந்தியா சி.இ.ஓ. ராஜினாமா

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2024      விளையாட்டு
Hockey 2023 04 17

Source: provided

ஹாக்கி இந்தியா அமைப்பில் நீண்டகாலமாக பணியாற்றி வந்த தலைமை நிர்வாக அதிகாரி எலினா நார்மன் (வயது 49) இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். 13 ஆண்டுகளாக பதவி வகித்த எலினா நார்மனுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. சம்பளம் நிறுத்தி வைப்பு மற்றும் நிர்வாகத்தில் ஏற்பட்ட பிளவு போன்ற காரணங்களால் தனது பணி மிகவும் கடினமாக இருந்ததாகவும் எலினா நார்மன் குற்றம்சாட்டினார். தனது முடிவு குறித்து எலினா நார்மன் மேலும் கூறியதாவது:-

சம்பளம் தொடர்பாக பல பிரச்சினைகள் இருந்தன. தொடர் வற்புறுத்தலுக்குப் பிறகு கடந்த வாரம் அதற்கு தீர்வு கிடைத்தது. ஹாக்கி இந்தியாவில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒரு பிரிவில் தலைவர் திலீப் திர்கேவும் நானும் இருக்கிறோம். அங்கே செயலாளர் போலாநாத் சிங், செயல் இயக்குநர் சி.டி.ஆர். ஆர் கே ஸ்ரீவஸ்தவா மற்றும் பொருளாளர் சேகர் ஜே.மனோகரன் ஆகியோர் உள்ளனர். இரு பிரிவினருக்கு இடையே நடந்த சண்டையை சமாளித்து என் பணியை செய்வது கடினமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

_________________________________________________

டி20 போட்டிகளில் அதிவேக சதம்

முதல் போட்டியில் நமீபியா மற்றும் நேபாளம் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நமீபியா 20 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது. நமீபிய வீரர் லாஃப்ட்டீ ஈட்டன் 33 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக நமீபியாவுக்கு எதிராக நேபாள வீரர் குசல் மல்லா 34 பந்துகளில் சதமடித்ததே அதிவேக சதமாக இருந்தது.

_________________________________________________

அரையிறுதிக்கு முன்னேறிய விதர்பா

விதர்பா மற்றும் கர்நாடக அணிகளுக்கு இடையேயான ரஞ்சிக் கோப்பையின் காலிறுதிப் போட்டி கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்று போட்டி நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் விதர்பா அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கர்நாடகத்தை வெளியேற்றியது. 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய கர்நாடகம் 243 ரன்களுக்கு ஆட்டமிழந்து. 

இதன் மூலம் கர்நாடகம் 128 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. விதர்பா தரப்பில் இரண்டாவது இன்னிங்ஸில் ஹார்ஷ் துபே மற்றும் ஆதித்யா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஏற்கனவே மத்திய பிரதேசம் மற்றும் தமிழ்நாடு அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், தற்போது விதர்பாவும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

_________________________________________________

டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி

மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின்  4-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.  மகளிர் பிரீமியர் லீக்கின் 2வது தொடர் பெங்களூரில்  பிப்-23 ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த தொடரிலும் டெல்லி, குஜராத், மும்பை, பெங்களூர், உ.பி.  ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் 2 முறை மோதும்.  இதில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். தொடர்ந்து 2, 3வது இடங்களை பிடிக்கும் அணிகள், எலிமினேட்டர் சுற்றில் விளையாடும். எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிச் சுற்றில் களமிறங்கும்.

இந்த நிலையில் நடைபெற்ற 4வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மற்றும் உபி வாரியர்ஸ் அணிகள் மோதின.  முதலில் களமிறங்கிய உபி வாரியர்ஸ் அணி  20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து டெல்லி அணிக்கு 120 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. தனது எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே வந்த டெல்லி அணி 14.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்து போட்டியை வென்றது. உபி வாரியர்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக ஸ்வேதா ஷெராவத் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 45 ரன்கள் விளாசினார்.  டெல்லி அணியின் பந்துவீச்சில்  ராதா யாதவ் 4, மாரிஸேன் காப் 3, அருந்ததி ரெட்டி, அனபெல் சதர்லேண்ட் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

_________________________________________________

நியூசிலாந்து முன்னணி வீரர் ஓய்வு 

நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னெர் (வயது 37). இவர் நியூசிலாந்து அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 874 ரன்னும், 260 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளார். வரும் 29ம் தேதி வெல்லிங்டனில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடும் லெவன் அணியில் நீல் வாக்னெர் இடம் பெற மாட்டார் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஓய்வு முடிவை அடுத்து வாக்னெர் கூறும்போது, இந்த முடிவு எளிதானது அல்ல.  அது உணர்ச்சிமிக்கது. ஆனால் முன்னேற இதுவே சரியான நேரம். பிளாக் கேப்ஸிற்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு தருணத்தையும் நான் ரசித்துள்ளேன். மேலும் ஒரு அணியாக எங்களால் சாதிக்க முடிந்த அனைத்திலும் பெருமைப்படுகிறேன். எனது வாழ்க்கையில் கட்டமைக்கப்பட்ட நட்பு மற்றும் பிணைப்புகளை நான் மிகவும் மதிக்கிறேன். இன்று நான் இருக்கும் இடத்தில் பங்கு வகித்த அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து