முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் காரில் பறக்கும் படையினர் சோதனை

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2024      தமிழகம்
RBU 2024-04-16

மதுரை, உசிலம்பட்டியில் இருந்து உத்தப்ப நாயக்கனூருக்கு வாக்கு சேகரிக்க சென்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். 

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இன்று மாலை 6மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. இதனால் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 

இதையடுத்து தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், உள்ளிட்ட பிரதான கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தமிழக முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தேசிய தலைவர்களும் தமிழகத்தில் முற்றுகையிட்டு தங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் களம் இறுதி கட்ட விறுவிறுப்பை எட்டி உள்ளது.

இந்நிலையில் தேனி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தேனி தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 

பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரும் முக்கிய பகுதிகளில் முகாமிட்டு வாகனங்களை சோதனை நடத்தி வருகின்றனர். 

இந்த சோதனையின் போது உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் பணம், தங்க நகைகள் மற் றும் பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். மதுரையிலும் வாகன சோதனை தீவிரமாக நடந்து வருகிறது. 

இந்த நிலையில் நேற்று காலை உசிலம்பட்டி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், உசிலம்பட்டியில் இருந்து உத்தப்ப நாயக்கனூர் நோக்கி வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது அங்கு இருந்த தேர்தல் பிறக்கும் படையினர் ஆர்.பி உதய குமார் மற்றும் வேட்பாளர் நாராயணசாமி ஆகியோர் சென்ற வாகனங்களை வழி மறைத்தனர். 

இதை தொடர் ந்து சாலையின் ஓரத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கார் மற்றும் வேட்பாளர் நாராயணசாமி மற்றும் நிர்வாகிகளின் 10 வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தினர். 

அப்போது பணம் உள்ளிட்ட எவ்வித பொருள்களும் சிக்கவில்லை. சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த வாகன சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வேட்பாளருடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து