முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் விசாரணை ஆணையம் அமைப்பு: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வியாழக்கிழமை, 20 ஜூன் 2024      தமிழகம்
udhayanidhi-stalin-kallakur

சென்னை, கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராயம் உயிரிழப்புகள் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தும், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், கருணாபுரம் காலனியில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் 42 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன்.

இச்சம்பவத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, ஆறுதல் தெரிவிக்க நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, மீண்டும் நேற்று அவர்களுடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியும் கள்ளக்குறிச்சிக்குச் சென்றுள்ளார்.

இதுவரை இச்சம்பவத்தில் விஷச்சாராய விற்பனையில் தொடர்புடைய நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதில் தீவிர விசாரணை மேற்கொண்டு, குறிப்பாக விஷச்சாராயம் தயாரிக்க மெத்தனாலை வழங்கியவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இச்சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட காவல் துறை அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, மாவட்ட ஆட்சித் தலைவரும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். மேலும் இது குறித்துத் தீர விசாரிக்கவும், உரிய மேல்நடவடிக்கை எடுக்கும் பொருட்டும், இவ்வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ரூ.50,000-ம் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இச்சம்பவம் தொடர்பாக, நேற்று, அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல் துறை இயக்குநர், கூடுதல் காவல்துறை இயக்குநர் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு), மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அலுவலர்கள், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அலுவலர்களுடன் கலந்தாலோசித்து, கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுமென்று நான் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மெத்தனால் கலந்த விஷச்சாராய உற்பத்தியிலும், விற்பனையிலும் ஈடுபட்ட அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டுமென்றும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள மெத்தனால் இருப்பை முழுமையாகக் கண்டறிந்து, அவற்றைக் கைப்பற்றி அழித்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளேன். மேலும், விஷச்சாராய உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட மெத்தனால் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பதற்கான மூலகாரணத்தையும் காவல் துறையினர் கண்டுபிடிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையைப் பொறுத்தவரையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சேலம் மற்றும் விழுப்புரம் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டுமென்றும், அங்கு அவர்களுக்குத் தேவையான சிறப்பு சிகிச்சை வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளேன்.

உள்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் காவல் துறை இயக்குநர் ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உடனடியாகச் சென்று, சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றினை இரண்டு தினங்களில் வழங்குவார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொண்டு, இது நிகழ்ந்ததற்கான அனைத்துக் காரணிகளைக் கண்டறியவும், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிடவும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்திட உத்தரவிட்டுள்ளேன். இந்த ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்கும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து