முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் லண்டன் பயணம்

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், பிப்.21 - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை பெண் அமைச்சர் ஹீனா ரப்பானி கர் 4 நாள் அரசு முறை பயணமாக லண்டன் சென்றுள்ளார். பாகிஸ்தான் பகுதியில் அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்துவதை நிறுத்த பிரிட்டிஷ் தலைவர்கள் உதவி செய்ய வேண்டும் என்று அவர் தனது பயணத்தின்போது வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள பாகிஸ்தான் பகுதியில் அல் குவைதா மற்றும் தலிபான்  தீவிரவாதிகள் ஏராளமான பேர் தங்கி பல்வேறு வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள பன்னாட்டு  படைகள் மீது அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.  இவர்களை ஒடுக்க பாகிஸ்தான் அரசாங்கம் போதுமான நடவடிக்கை எடுக்காததால்  அமெரிக்க படைகள் நேரடியாக பாகிஸ்தான் பகுதிக்குள் ஆளில்லா விமானங்கள் மூலம்  ஏவுகணைகளை வீசி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.

இதுபோன்ற ஏவுகணை தாக்குதல்களை தங்கள் நாட்டிற்குள் தங்களை கேட்காமல் நடத்தக்கூடாது என்று பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதை ஏற்காத அமெரிக்கா சமீபத்தில் கூட வடக்கு வஜ்ரிஸ்தான் பகுதியில் இரு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.

தற்போது நான்கு நாள் அரசு முறை பயணமாக லண்டன் சென்றுள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹீனா ரப்பானி கர், பிரிட்டன் தலைவர்களுடன் முக்கிய பேச்சு நடத்தி இதுபோன்ற தாக்குதல்களை நடத்த வேண்டாம் என்று அமெரிக்காவிடம் எடுத்துச் சொல்லுமாறு வேண்டுகோள் விடுப்பார் என்று தெரிகிறது.

கர் தனது பயணத்தின்போது லண்டனுக்கு வரும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனையும் சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லண்டனில் பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து பேசும் கர் மேலும் பல முக்கிய அம்சங்கள் குறித்து பிரிட்டிஷ் தலைவர்களுடன் பேச்சு நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானுக்குள் அமெரிக்கா நடத்தும் ஏவுகணை தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சமீபத்தில் பிரிட்டன் பிரதமர் டேவிட் காமரூனை  சந்தித்து பேசியபோது பிரிட்டனுக்கான பாகிஸ்தான் தூதர் வாஜித் ஷாம்சூல் வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்