முக்கிய செய்திகள்

20 ஆயிரம் துணை ராணுவ படையினர் சென்னை வருகை

திங்கட்கிழமை, 4 ஏப்ரல் 2011      தமிழகம்
India Army  1

 

சென்னை, ஏப்.- 4 -தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே இருக்கிறது. அமைதியான முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தமிழக போலீஸ் டி.ஜி.பி. லத்திகாசரண் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக  போலாநாத் நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 54 ஆயிரம் வாக்குச் சாவடிகளிலும் துணை ராணுவ படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அனைத்து தொகுதிகளுக்கும் சமமாக பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தேர்தல் பாதுகாப்புக்காக துணை ராணுவ படையினர் வந்த வண்ணம் உள்ளனர். இதுதவிர 200 கம்பெனி (20 ஆயிரம்) துணை ராணுவப் படையினர் தமிழக தேர்தல் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். நேற்று காலையிலும் ஒரு கம்பெனி துணை ராணுவப் படையினர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து இறங்கினர். இவர்கள் விருதுநகர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். செனை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று காலை வரையில் 4 ஆயிரம் துணை ராணுவத்தினர் வந்து இறங்கியுள்ளனர். கூடுதலாக துணை ராணுவப் படையினர் இன்னும் சில தினங்களில் வரவழைக்கப்பட உள்ளனர். தமிழகம் வந்துள்ள துணை ராணுவப் படையினர் தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசாரோடு இணைந்து வாகன சோதனையில்  ஈடுபட்டு வருகிறார்கள். இதில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் சிக்கியது.

வாகன சோதனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு கூறிய ஐகோர்ட் நீதிபதிகள், வாகன சோதனைக்கு தடை இல்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து வாகன சோதனை மீண்டும் சூடு பிடித்துள்ளது. கடந்த 2 நாட்களாக தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

இது தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியதாவது:-

தமிழக தேர்தல் பாதுகாப்புக்கு கூடுதல் துணை ராணுவப் படையினர் விரைவில் தேர்தல் கமிஷனால் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் வாகன சோதனை தேர்தல் நாளான ஏப்ரல் 13-ந் தேதி காலை வரை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்: