முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி மறைவு

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஏப்.18 - பிரபல இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி மறைவுக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பழம்பெரும் திரைப்பட இசையமைப்பாளரும், மெல்லிசை மன்னர்களில் ஒருவருமான  டி.கே.ராமமூர்த்தி  மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து சொல்லொணாத் துயரமும், மிகுந்த மன வருத்தமும் அடைந்தேன். 

மிகச் சிறந்த வயலின் கலைஞரான  ராமமூர்த்தி  இசையமைப்பாளர்  எம்.எஸ். விஸ்வநாதனுடன் இணைந்து தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாள மொழிப் படங்களில் 700-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து முடிசூடா மன்னனாக விளங்கியவர். தனியாகவும் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். அவ்வாறு அவர் தனியாக இசையமைத்த நான் திரைப்படத்தில் வரும் அம்மனோ சாமியோ என்ற பாடல் மிகவும் பிரபலமாகி மக்களின் வரவேற்பை பெற்றது.  அதில் நான் நடித்ததை வாழ்நாளில் மறக்க முடியாது. 

இவர் இசையமைத்த பாடல்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் பசுமையாக நிலைத்து நிற்கின்றன.  எம்.ஜி.ஆர். நடித்த 'பணம் படைத்தவன்' திரைப்படத்தில் 'கண்போன போக்கிலே கால் போகலாமா' என்ற பாடலில் வரும் வயலின் இசைக்குச் சொந்தக்காரர் டி.கே. ராமமூர்த்தி. 'புதிய பறவை' படத்தில் இவரது பங்களிப்பில் உருவான 'எங்கே நிம்மதி' என்ற பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.  தமிழ் திரைப்பட இசையில் இவர் ஆற்றிய பணி மகத்தானது. 

ராமமூர்த்தியின் மறைவு தமிழ் திரைப்படத் துறையினருக்கும், இசைத் துறையினருக்கும் மட்டுமல்லாமல் எனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.  

ராமமூர்த்தியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony