முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோசடி: லீனாவின் காதலனுக்கு போலீஸ் வலை

சனிக்கிழமை, 1 ஜூன் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூன்.2 - அம்பத்தூர் கனரா வங்கியில் ரூ. 19 கோடி மோசடி செய்தது மற்றும் சேலையூரைச் சேர்ந்த சக்ரவர்த்தி என்பவரிடம் ரூ. 72 லட்சம் மோசடி செய்த வழக்குகளில் பிரபல மோசடி மன்னன் சுகாஷ் சந்திரசேகரை போலீசார் தேடிவந்தனர்.பெங்களூரைச் சேர்ந்த இவர் தனது 19 வயதில் மோசடி வித்தைகளை தொடங்கினார். கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் கைவரிசை காட்டி வருகிறார். அழகு நிலையம் ஒன்றில் மோசடி செய்த வழக்கில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சேத்துப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பிறகு அவர் ஜாமீனில் விடுதலையாகி சென்னையில் தங்கி தனது மோசடி வேலையை மீண்டும் காட்டினார்.

சில மாதங்களுக்கு முன்னர் அம்பத்தூர் கனரா வங்கியின் மண்டல மேலாளர் நல்ல சிவம் புகார் அளித்த பின்னர்தான் சுகாஷ், மீண்டும் இங்கு பதுங்கி இருந்து மோசடி செய்வது அம்பலமானது. மோசடி மன்னன் சுகாசை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் களமிறங்கினர். இணை கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் சிவக்குமார் ஆகியோரது மேற்பார்வையில், உதவி கமிஷனர் வசுந்தராதேவி, இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். அப்போது சுகாஷ் தனது காதலியும் நடிகையுமான லீனாவின் டெல்லி பண்ணை வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

உடனடியாக டெல்லிக்கு விரைந்து சென்ற போலீசார், நடிகை லீனாவை சுற்றி வளைத்து கைது செய்தனர். ஆனால் சுகாஷ் சந்திரசேகர் நூலிழையில் போலீஸ் பிடியில் சிக்காமல் நழுவி ஓடிவிட்டார். அவர் டெல்லியில் பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதற்கிடையே நேற்று முன்தினம் சென்னை கொண்டு வரப்பட்ட நடிகை லீனாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சுகாஷ் பற்றி லீனாவிடம் கேட்டபோது, அவரை நம்பி நான் ஏமாந்து போனேன் என்று கூறினார்.

பெரிய டைரக்டர் என்று கூறி என்னுடன் அறிமுகமான சுகாஷ், முன்னணி நடிகையாக்குவதாக கூறியதால், அவரது காதல் வலையில் நான் விழுந்துவிட்டேன் என்றும் போலீசிடம் தெரிவித்துள்ளார். லீனாவை கருவியாக பயன்படுத்தி தலைமறைவாக உள்ள சுகாசை பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். லீனா சென்னைக்கு அழைத்து வரப்பட்ட பின்னரும், தனிப்படை போலீசில் ஒரு பிரிவினர் டெல்லியிலேயே முகாமிட்டு சுகாசை தேடிவந்தனர். ஆனால் அவரை பிடிக்க முடியவில்லை. அவர் எங்கு பதுங்கினார் என்பது மர்மமாக உள்ளது. இதையடுத்து நேற்று காலையில் தமிழக போலீசார் சென்னை திரும்பினர்.

போலீசார் தேடுவதை அறிந்ததும் சுகாஷ் டெல்லியை விட்டு தப்பிச் சென்றுவிட்டார். பக்கத்து மாநிலங்களில் நெருங்கிய நண்பர்கள் யாருடைய வீட்டிலாவது சுகாஷ் பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து 2 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். சுகாஷ் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விடாமல் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் அனைத்து விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் சுகாஷ் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் சுகாஷ் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதேபோல கர்நாடகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி போல நடித்து மோசடி செய்த அவர், கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டியிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் நிலுவையில் உள்ளன. இதில் ஒரு சில வழக்குளில் மட்டுமே சுகாஷ் சிக்கியுள்ளார். தனக்குத்தானே பாதுகாவலர்களை வைத்துக் கொண்டு, விலை உயர்ந்த ஆடை அணிகலன்களை அணிந்தபடியே வலம் வந்துள்ள சுகாஷ், தனி ராஜாங்கமே நடத்தி வந்துள்ளார். சொகுசு பேர்வழியான சுகாஷ், எப்போதும் விதவிதமான கார்களிலேயே சுற்றி வந்துள்ளார்.

இதற்காக மோசடி பணத்தில் விலை உயர்ந்த கார்களையும், வாங்கி குவித்துள்ளார். இதே போல கைகெடிகாரங்கள் மீது சுகாசுக்கு அளவு கடந்த மோகம் இருந்துள்ளது. இதனால் ரூ. 50 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரையிலான கைக்கெடிகாரங்களையும் வாங்கி வைத்திருந்தார். தினமும் விதவிதமாக கைக்கெடிகாரங்களை அணிந்து அழகு பார்த்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் கைவரிசை காட்டிய நேரத்தில் முதல்- அமைச்சர் வீட்டின் செல்லப்பிள்ளை நான், எனக்கு எல்லா மாநிலங்களிலும் நல்ல செல்வாக்கு உள்ளது என்றும் சுகாஷ் கதை விட்டுள்ளார். இதை நம்பித்தான் பலர் ஏமாந்துள்ளனர்.

மோசடி பணத்தை தனது வங்கி கணக்கில் போட்டு வைத்துள்ள சுகாஷ், அதன் பின்னர் அதனை எந்தெந்த துறைகளில் முதலீடு செய்துள்ளார் என்பது பற்றியும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். ஷேர் மார்க்கெட்டில் அவர் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்திருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுபற்றியும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் சுகாசின் சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சுகாஷ் பற்றி மேலும் தகவல்களை திரட்டுவதற்காக லீனாவை போலீசார் காவலில் எடுக்கவும் முடிவு செய்துள்ளனர். இதற்காக நாளை (திங்கட்கிழமை) கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்