முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாக்டர் படுகொலை: கூலிப் படையினரை பிடிக்க வேட்டை

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை, செப்.30 - துரைப்பாக்கத்தை சேர்ந்த டாக்டர் சுப்பையா, கடந்த 14_ந்தேதி அபிராமபுரத்தில் வைத்து மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டப்பட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் 25_ந் தேதி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக அபிராமபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டாக்டர் சுப்பையாவின் சொந்த ஊரான குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் உள்ள சொத்து தொடர்பாக அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான பொன்னுசாமிக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இதில் ஏற்பட்ட தகராறில்தான் டாக்டர் சுப்பையா கொலை செய்யப்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து பொன்னுசாமி, மற்றும் அவரது மனைவி மேரிபுஷ்பம், மகன்கள் வக்கீல் பெய்சில், என்ஜினீயர் போஸ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பெய்சில், போஸ் இருவரும் சைதாப்பேட்டை கோர்ட்டில் சில நாட்களுக்கு முன்னர் சரண் அடைந்தனர். இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

பொன்னுசாமி, மேரி புஷ்பம் ஆகியோரை கைதுசெய்ய போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதையடுத்து 2 பேரும் நேற்று கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். பின்னர் 2 பேரும் சென்னை போலீசிடம் ஒப்படைக்கப்பட்டனர். நேற்று முன்தினம் காலையில் பொன்னுசாமியும், மேரிபுஷ்பமும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

அபிராமபுரத்தில் டாக்டர் சுப்பையா வெட்டுப்பட்ட காட்சி அப்பகுதியில் ஒரு வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த கேமிராவில் பதிவாகி உள்ளது. இவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கேமராவில் 3 பேரின் உருவம் பதிவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இக்கூலிப்படை கொலையாளிகள் நெல்லையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றுள்ளனர். கொலையாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதேபோல கோவை மற்றும் பெங்களூரிலும் 2 தனிப்படையினர் முகாமிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony